ஓகோவெனும் பொய்களின் முன்னர்!
ஓலமிடும் உண்மை வாயடைக்கிறது.!
மாலை பொன்னாடைப் போர்வையில்!
கூடும் வாசனையுலகை மயக்குகிறது.!
சிரிக்கும் உதடுகளால் சிந்தி!
சிமிட்டும் கண்களால் விரிந்த!
சுற்றறிக்கைப் பொய் வார்த்தைகளில்!
சிதறியொழிகிறது பெரும் உண்மைகள்.!
வாய்பந்தலோடு வாலாட்டும் பல !
பொய்ப் புகழ்ச்சிகள் உண்மையை!
நிர்வாணமாக்கிக் கண் மூடி!
நீசத்தனமாய் நாட்டியமாடுகிறது.!
அரிச்சந்திரப் பாதை மாறி!
அடியெடுக்கும் ஆலவர்ணப் பொய்!
விசிறிகளுக்குத் தானே உலகில்!
ஆரத்தியும் ஆரவார வரவேற்பும்!!
ஈழவரை நம்ப வைத்து!
ஈவிரக்கமற்று அவர் வாழ்விடத்தை!
ஈனத்தனமாய் அபகரிக்கும் நன்மையற்ற !
ஈழவரையழிக்கும் பொய் அழியாதோ!!
இது எத்தனை நீள நாடகம்!!
பொது உண்மையெதுவெனத் தெரிந்தும்!
மெதுவாக அங்கீகாரத்துடன் அரியணைக்காய்!
ஒதுங்கி நகருகிறது அநியாயம்!!
7-6-2009
வேதா. இலங்காதிலகம்