அதிகாலையின் அலைகளுக்குள் சேவலின் சினுங்கல்!
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்!
என் கட்டிலின் மூட்டைப் பூச்சிகளுக்கு என் இரத்த தானம்!
பக்கத்து வீட்டு வானொலியில் பொங்கும் பூம்புனல்...!
இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை!
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்!
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்!
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்!
எங்கள் முற்றத்து குழாயடியில்தான் என் முதல் எதிர்பார்ப்பு!
சொட்டுச்சொட்டாய் வருமா! இல்லை அருவியாய் வருமா! என்று!
இஞ்சிபோட்ட தேனீரின் சுவையில் ஏழு மலைகளை!
எட்டி உதைக்கும் ஓர் உற்சாகம் எனக்குள்ளே..!
மூன்று வருடத்தின் முன் முக்குழித்த என் மூக்குக் கண்ணாடி!
அதன் பெயருக்கேற்றால் போல் மூக்குக்கு கண்ணாடிதான் அது!
நேற்றைய பத்திரிகையின் பக்கங்களின் உள்ளே!
எதிர்பார்ப்புடன் சுழியோடும் போது பழையவைகளின் மறுபிறப்புக்கள்!
அடிக்கடி இருமிக்கொள்ளும் என் இதயத்தின் இடிபாடுகள்!
ஏதொ ஒரு எதிர்பார்ப்புடன் தன்னந்தனியே ஏங்கி நிற்கின்றது.!
வயோதிபர் மடத்தின் என்னை விட்டுச்சென்ற மகனுக்காகவா!
இல்லை என்னை அழைத்துச்செல்ல வரும் எமனுக்காகவா
கல்முனையான்