விடியலிலேயே
துக்கச் செய்தி காதில் விழுந்தது
ஏறக்குறைய
என் வயது தான் இருக்கும்
டேங்கர் லாரியின்
அகோரப் பசிக்கு சிக்கியது
அவனது இரு சக்கர வாகனம்
மரணச் செய்தியை கேட்டவுடன்
மனதில் ஏற்படும் அதிர்வுகள்
சொல்லில் அடங்காதது
இசை நாற்காலி போலல்லாமல்
எல்லோரும் உட்காரத்தான் வேண்டும்
அந்த நாற்காலியில்
சுதந்திரத்துக்கு ஏங்கியே
சுழலுகின்றன
கிரகங்களெல்லாம்
சூரியனின் இழுவிசையிலிருந்து
பூமி விடுபட்டால்
மனித இனம் என்னாகும்
யோசிக்கவே பயமாயிருக்கிறது
நடப்பதெல்லாம் துக்ககரமாயிருக்கிறது
கைவிடப்பட்ட உலகம்
என்றாவது ஒரு நாள்
நம்மை மென்று விழுங்கும்
ப.மதியழகன்