அதிகாலையில்
பணியிலிருந்து திரும்பும் நங்கை
ஒரு சாம்பல் நிறப்
பொழுதினைப் பார்க்கிறாள்
ஒரு தேநீர்க் கோப்பையின்
சாம்பல் நிற ஆவியிலிருந்து
பிறக்கும் ஒரு உலகினைப் பார்க்கிறாள்
ஒரு பகலின் நொடியினைவிட
ஒரு இரவின் நொடி புதிர் மிகுந்தது
எங்கெங்கும்
ஏதோ ஒன்று துவங்குகையில்
எல்லாவற்றையும்
முடித்து வைப்பதற்கு மனமில்லாமல்
சாலையோரம் உதிர்ந்துகிடக்கும்
ஏதோ மலரைக் கையில் எடுக்கிறாள்
அது தன்னுடைய நாளின் மலரல்ல
என்று புன்னகையுடன்
திரும்ப வைக்கிறாள்
ஒரு பகலின் சாத்தியங்களைவிட
ஒரு இரவின் சாத்தியங்கள்
எல்லையற்றவை
எந்த ஒரு பகலையும்விட
ஒரு தூக்கமற்ற இரவு
அவளது புலன்களைப்
பிரகாசிக்க வைக்கிறது
புலர்ந்து வரும் பொழுதின்
ஒவ்வொரு கண் விழிப்பிற்கும்
ஒவ்வொரு மணியோசைக்கும்
தலை வணங்குகிறாள்
அவை வேறொரு உலகின் அழைப்பு
என்றுணரும்போது திடுக்கிடுகிறாள்
ஒரு பகலின் நினைவுகளைவிட
ஒரு இரவின் நினைவுகள்
கருணையற்றவை
சூரியனின் ஒரு கிரணத்தில் தொடங்கி
இன்னொரு கிரணத்தில் முடியும்
ஒரு வாழ்க்கையின்
புராதன சுழற்சியிலிருந்து
முற்றாக நீங்குகிறாள்
அது அவளது உடலை
எடையற்றதாக மாற்றுகிறது
அவளது மெல்லிய இமைகளைக்
கனத்துப்போகச் செய்கிறது
ஒரு பகலின் குரல் கேட்பதேயில்லை
ஒரு இரவின் குரலை மௌனமாக்கவே முடிவதில்லை
அணைத்துக் கொள்ள வேண்டும்
என்று விரும்புகிறாள்
தனியே
அதிகாலையின்
சாம்பல் நிறத் துயிலில்
வீழ்கிறாள்
ஆழமாக
வெகு ஆழமாக
ஒரு சாம்பல் நிறக் கனவு
காண்கிறாள்
ஒரு பகல் என்பது
ஒரு வேலை நேரம்
ஒரு இரவு என்பது
இன்னொரு வேலை நேரம்
மனுஷ்ய புத்திரன்