ஒரு பட்டாம்பூச்சி விளையாட்டாக
ஒரு யானையை விழுங்க முயன்றது
எவ்வளவு விழுங்கிய பிறகும்
யானை அப்படியே வெளியே இருந்தது
ஒரு யானை பிடிவாதமாக
ஒரு பட்டாம்பூச்சியை
விழுங்க முயன்றது
விழுங்கிய பிறகு
தனக்குள் பட்டாம்பூச்சி
எங்கே இருக்கிறது என்று
யானையால் கண்டுபிடிக்கவே முடியவில்லை
பட்டாம்பூச்சியை விழுங்கினோமா இல்லையா
என்று யானை குழம்ப ஆரம்பித்தது
இந்த துயர நாடகத்திற்கு
முடிவு கட்ட
யானை தன்னைத் தானே விழுங்க முயன்றது
பட்டாம்பூச்சி தன்னையே தின்னத் தொடங்கியது
இன்னொருவரை
உண்பதைக் காட்டிலும்
தன்னைத் தானே உண்பது
எவ்வளவு பயங்கரமானது
என்பதை உணர்ந்துகொள்ள
அவற்றிற்கு அதிக நேரம் ஆகவில்லை
மனுஷ்ய புத்திரன்