அந்தி கூடியதும்
நல்ல வெந்நீரில் குளிக்கிறாள்
தலையை அவ்வளவு நேர்த்தியாக
வாரிக்கொள்கிறாள்
ஆழ்ந்த லயிப்புடன் ஒப்பனையிட்டு
முகத்தை திருத்தமாக நேர் செய்கிறாள்
முக்கியமான தினங்களில்
மனமுவந்து ஏற்கும் ஆடையையே
மீண்டும் தேர்வு செய்கிறாள்
அவளது மன நிலையினை
சற்றே இடம் மாற்றும்
அந்த வாசனை திரவியத்தை
தெளித்துக் கொள்கிறாள்
ஆபரணங்களைக் கவனமாக
அணிந்துகொள்கிறாள்
சமையலறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா
எலலாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டோமா
என்று சரிபார்த்துக்கொள்கிறாள்
பிறகு
கண்ணாடியில் சற்றே
தன்னை உற்றுப் பார்க்கிறாள்
அவளை
அவளுக்கு
அவ்வளவு பிடித்திருக்கிறது
இனி
அவள் செய்வதற்கு
அங்கே ஒன்றுமே இல்லை
எல்லாம் செய்யப்பட்டு விட்டது
எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்டது
நேரமாகிவிட்டதா என
கடிகாரத்தைப் பதற்றத்துடன் பார்த்தபடி
காலணிகளைத் தேடுகிறாள்
சட்டென ஒரு கணம்
எதையோ நினைக்கிறாள்
அலமாரியைத் திறந்து
ஒரு சிறிய மாத்திரையை எடுக்கிறாள்
படுக்கைக்குச் சென்று
அமைதியாக நித்திரையில்
ஆழ்கிறாள்

மனுஷ்ய புத்திரன்