இடப் படாத முத்தமொன்று
இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
வந்தமர்ந்தபோது
பனிக் காலத்தின் ஆயிரம்
உறைந்த கண்கள்
அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்
தன் கூச்சத்தின்
இறகுகளைப் படபடவென
அடித்துக்கொண்டது
திசை தப்பி வந்த
வேறொரு உலகத்தின் பறவையென
அன்பின் துயர வெளியின் மேல் அது
பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்கு தான்
அந்த கணம் வந்தமர்ந்த
இடம் குறித்து
எந்த யோசனையுமில்லை
ஒரு தந்திரமில்லை
ஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்
நான் அதைப் பற்றிக்கொள்ள
விரும்பினேன்
இடப்படாத அந்த முத்தம்
சட்டென திடுக்கிட்டு
எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம்
யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத
காதலின் ஒரு தானியத்தை
அதற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன்
இடப்படாத முத்தங்கள்
எதையுமே பெற்றுக்கொள்வதில்லை
எவ்வளவு தூரம் பறந்தாலும்
அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை
அவை
பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன
பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன
ஒரு வேளை
நீ அந்த முத்தத்தை
இட்டிருந்தால்
அது முத்தமாகவே இல்லாமல்
போயிருக்கலாம்
மனுஷ்ய புத்திரன்