ஒலிவற்றிக் காய்ந்த குருட்டு இரவில் !
பழித்தன எல்லா நட்சத்திரங்களும்!
சாட்சி சொல்வதற்கும் அஞ்சிய நிலவை !
எந்த வசைச் சொல்லாற் திட்டுவேன்?!
ஒரு வழிகேட்டு அலைகிறேன்!
காவற்காரரிடம் கெஞ்சி, !
படைகொண்டு போக அல்ல!
பொருள்சேர்த்துப்போகவும் அல்ல!
வளர்த்த நாயைக்கொண்டு செல்லவும் அல்ல!
வேதனை நிரம்பி!
வலியின் வேரோடிய !
என்னுடலில் வளரும் நோயைக் கொண்டு தொலைக்க!
பிணியெல்லாம் பரவிய ஊரில்!
மருந்துமில்லை மருத்துவரும் இல்லை!
பாழடைந்த மருத்துவமனைகளின்!
முனகலொலி உடலையூடுருவி!
நெருப்பையள்ளிக் கொண்டலைகிறது!
சிதைதேடி.!
குலுங்கும் மார்பிலிருந்து!
கொட்டுண்டன துயர்ப்பாசி படர்ந்து வழுவழுப்பான !
ஈரமூறிய வார்த்தைகள்.!
அவற்றை நான் சேகரித்து வைத்திருந்தேன்!
காய்ந்து வரண்ட கோடைக்குள்ளும்!
தோலையுரித்துச் சோதனையிடும் படைவீரரிடமிருந்தும்!
நானே எரிந்த பல நாட்களிலும்!
அவற்றில் தீபடாமலே.!
அவமதிப்புகளின் கீழான !
நிலப்பரப்பில் !
இறுகிப்படிந்திருக்கும் மௌனத்திற்கிடையில்!
ஒரு சொட்டுத் துளி!
உடற்சாறு தேங்கிக் கிடந்தது!
வனப்பு மிக்கதொரு !
கடற்கரையும் !
காகங்கள் கரையும் நாட்களும் இருந்தன!
எனவும்!
ஒற்றையடிப்பாதைகளில்!
எறும்புகள் தம்பாட்டிலும் மனிதர்கள் தம்பாட்டிலும்!
போய்வரக்கூடிய காலமொன்று !
இருந்ததாயும்!
சொல்லிக்கொண்டு.!
இன்றோ!
தெருமுனையில் !
பெருமரத்தின் கீழே இருந்தது கோயில்!
நாயுறங்க.!
நாயினடியில் ஓலமிட்டவாறு!
என்னுடலும் !
அதன் வால் நீண்ட !
குருத்தெலும்பும்!
வழியற்றுச் செத்தான் ஒரு மனிதனென்று சொல்ல
கருணாகரன்