நெஞ்சத்திலே துஞ்சாமலே!
நிதமும் தோகை விரித்தாடும்!
கனவுகள் ஆயிரமுண்டு தோழா!
காலம் மாறி அவை கைகூடிட .....!
கண்களிலே விரியும் பூக்கள்!
கண்ணீர்ப் பூக்களாய் தினமும்!
காற்றைப் புசித்து வாழுவோரின்!
காலம் மாறி புன்னகை பூத்திட ....!
தமிழ் நெஞ்சில் கொண்டு பாவம்!
தாளாத வறுமையுடன் போராடும்!
தீராத தாகம் கொண்டோர் வாழ்வில்!
தீராத ஏக்கங்கள் யாவுமே தீர்ந்திட .....!
அறிவென்னும் விளக்கை பற்றவைக்க!
அடையாமல் வசதி என்னும் திரியை!
ஆறாகப் பாயும் ஆவலைத் தீர்க்க!
அல்லாடும் சிறார்கள் வாழ்வு சிறந்திட ....!
நேற்றைய செல்வம் கொடுத்த நிழலில்!
இன்றைய வாழ்வைக் கழித்துக் கொண்டு!
நாளை இல்லாதோரைப் பார்த்துக் கொண்டே!
நடப்போர் இதயம் மாறி உள்ளம் விரிவடைந்திட.....!
உழைத்து உழைத்துச் சிவந்த கைகளை!
உயர்த்திப் பிடிக்க வலுவின்றிப் பாவம்!
உருக்குலைந்த உருவங்களின் வாழ்வு!
உயர்வடைந்து உள்ளத்தில் உவகை பூத்திட ....!
பேதங்களற்ற பூரண சமுதாயம் ஒன்றில்!
பிணிகளற்ற மக்கள் இணைந்து ஒன்றாகிப்!
பாசமலர்களால் இணைந்த பூமாலையாய்!
பூமி மாறும் காலம் தோழனே! வந்திட ...!
கனவு மெய்ப்பட வேண்டும் என்று!
கரங்களைக் கூப்பி நான் எம்மைக்!
காத்திடும் பொதுவான இறை நோக்கி!
கண்ணை மூடிக் கனவுலகில் நீந்திட...!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்