மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.
கண்ணீர் எனும் கள்ளக் காதலியின்
கன்னத்து முத்தங்களும்.
தாளில் எழுதி வைத்த என்
தனிமைத் தவிப்புகளால்
தற்கொலை செய்து கொண்ட தமிழும்.
இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்.
அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.
கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.
என்றோ செத்த கறிக் கோழியில்
இன்று வைத்த குருமாவும் அதை
தின்று செரிக்காத குடலும்.
நினைவுகள் அலையும் நிசப்த்த இரவுகளில்
நெருப்பாய் கொதிக்கும்
நிலவின் வெளிச்சமும்.
எவரஸ்ட் ஏறுவதாய் சொல்லிவிட்டு
எரிமலை விளிம்பில் எரிந்து
கருகிப்போன என் லட்சியக் கனவுகளும்.
சூரியன் தொட்டுப்பார்த்து
சுருக்கிப்போன தோலை
உற்றுப்பார்த்து ஒதுங்கிப்போகும்
பார்வைகளுமாய்.
கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்;
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!
அந்திவரை அம்மணத்தை மறைக்கும்
அனாதைச் சிறுமியாய்
அத்தனையும் மறைத்து விடுகிறேன்
சீமான்கனி