கார்கால சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;
கடிவாளம் போடாமல்
காற்றோடு போராடி
கைகொண்டு நிலைமுட்டும்
கதவுகள்;
படுக்கையில் கூட்டு புழுவாய் நீ...
மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.
கூனிப்போன உன் முதுகேறி கொசுக்கள்
குதிரைச்சவாரி செய்யலாம்!
ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய் கூச்சலிடலாம்!
சோற்றுபருக்கையின் கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்! அதன்
இளஞ்சூட்டில் இதயம் வெந்து
இறந்தும் போகலாம்!
ஜன்னல் கம்பியாய் தேய்ந்த தேகம்
மழைச்சாரல் பட்டு முறிந்துபோகலாம்!
போதும்!
துவண்டு துவண்டு வண்டு தீண்டும்
செண்டாய் இருந்தது போதும்!
அச்சமில்லை பாடிய பாரதியின் வாக்கை
துச்சமாய் எண்ணி துவண்டு கிடைக்காமல்
துளிர்த்துவா.
சொல்லுக்கே சோணங்கி விட்டால்
சொர்க்கம்கூட சுகமாய் இராது
சுருக்கென எழுந்து வா.
அடகுவைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று.
கனவுகள் வெறும் கற்பனைகள் அல்ல
அள்ளிவீசிய உன் கனவுகளை கண்டெடு.
மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால்
காற்று கதறும் காலநிலை சிதறும்.
உன் பட்டுச் சிறகுகள் படர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு
சீமான்கனி