கள்ளி (பெண்) பால் - சீமான்கனி

Photo by Alexander Grey on Unsplash

அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உதைத்து
வெளிவர விண்ணப்பம் போடுகிறாள்.

வேண்டாமடி என் செல்லமே இருட்டி விட்டது
விடியும் வரை பொறுத்திரு...
நீ பிறந்தாவது விடியட்டும் நம் விதி.
உடனே வருவதென்றால்
உன் இருட்டு விடியல்  
உன்னை இடிய  விடுமடி.
அச்சம் என்னை ஓடிய விடுமடி.
அன்னையின் அருள் கேட்டு
பொறுத்தாள்  பொன்னியின் செல்வி.

சேவல் கூவும் முன்னே
அன்னையின் அடி வயிற்றில்
அலாரம் அடித்து வரப்போவதை
உயிர் மொழியாய் வழிமொழிந்தாள்.
முட்டையை முட்டும்
பெட்டை  கோழியாய்
முட்டி மோதி பார்த்து விட்டு
முக்களோடு முனங்களையும் சொல்லி தந்தாள்  
முல்லை இவள்.
பத்து நிமிட  பாடுக்கு பின்  பனிக்குடம் உடைத்த  
பால்குடமாய் பவனி  வந்தாள்.

தலைகிழாய் தரையிறங்கி
தாரணி பார்க்க தயங்கிய   தங்கம் இவள்;
கண்னடைத்த  கண்ணகியாய்  
கண்திறக்க காலம் பார்த்து கிடந்தாள்.

சீம்பால்   சுரந்திருக்க  பச்சை
காம்பால் கறந்து வந்த கள்ளிப்பால் காத்திருக்கு;
கருத்த கிழவி ஒன்று காரியம் பார்த்திருக்கு.
காத்திருந்தது போதும் கண்விழி கண்மணியே
கதறி அழு பொன்மணியே
காது இருந்தால் அந்த
கடவுளாவது கேக்கட்டும்  உன் கதறலை.

கணநேரம் கழித்து கன்னியவள்
கதறுகையில் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ
கார்முகிலன் காது முட்டி கரைத்தது கார்முகிலை
கண்ணிர் கதறி மழையாய் உதறி விட்டான்
அந்த மந்தார பூமியிலே.  

காஞ்சு  போன கழனி எல்லாம்
கை விரித்து கவர்ந்து கொண்டது
கண மழையை.

மங்கை இவள் மனுஷி இல்லை
மகமாயி மறு உருவம் என்று
மக்களெல்லாம் மண்டி இட.
அருள் வாக்கு சொல்லும்
அம்மனின் அவதாரமாய்...
இதற்க்கு கள்ளிப்பாலே
குடித்திருக்கலாம் என் உயிரை.
அடிமனதில் அடித்து கொண்டு
வேப்பில்லை யால் வெளுத்து   
வாங்கினாள்  வேறொருவனை
சீமான்கனி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.