இறந்த காலம் காதலுக்கு மட்டும் இல்லை - அது
இருந்தாலோ அதற்கு பேர் காதலில்லை
பிறந்த பயன் காதலிலே பூர்த்தியாகும் - காதல்
பிழம்பாலே நம் கண்கள் ஜோதியாகும்
ஒடியாத கிளையென்று நினைத்திருந்தேன் - கிளி
உட்கார்ந்து போன உடன் வளைந்து போனேன்
வடியாத நதியென்று நினைத்திருந்தேன் - நீ
வந்தஉடன் உன் மடியில் வடிந்து போனேன்!
உன்னை நான் பார்த்த உடன் நெஞ்சிக்குள்ளே - அடி
உட்சிறகு ஒரு லட்சம் முழைக்கக் கண்டேன்
விண்ணைப் போய் முட்டிவிடக் கூடாதென்றே - இன்று
விரிகின்ற சிறகுகளை சுருக்கிக் கொண்டேன்
எங்கே நான் பறந்தாலும் என்ன பெண்ணே - தினம்
இழைப்பாற உன் மடி தான் எனக்கு வேண்டும்
கங்கை நதி ஊரெல்லாம் திரிந்தாலென்ன - அடி
கடலில் தான் அது சென்று சேர வேண்டும்
சிரிப்பதற்கு மட்டுமிந்த உதடு போதும் - பார்வை
சிந்தி விழ மட்டுமந்த கண்கள் போதும்.
எரிப்பதற்கு மட்டுமந்த அழகு போதும் - ஆணை
இடுவதற்கு மட்டுமந்த விரல்கள் போதும்
கருப்புகளை மறந்து விட்டு எரிந்து நிற்கும் - ஒரு
கனகமணி விளக்கைப் போல் நமக்கும் தோழி
உறுப்புகளை மறந்துவிட்ட காதல் வேண்டும் - அது
உண்மையிலே சாத்தியமா முயன்று பார்ப்போம்
கண்ணன்