தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சாத்தான்களுக்கென்ன குறை?

இமாம்.கவுஸ் மொய்தீன்
குதிரைப் பந்தயமாகட்டும்!
சீட்டாட்டமாகட்டும்!
எல்லாச் சூதாட்டங்களிலுமே!
வெற்றிகள் உண்டு!
பரிசுகளும் உண்டு - ஆனால்!
அதைக்கொண்டு கோட்டீஸ்வரர்!
இலட்சாதிபதியானதும்!
இலட்சாதிபதி!
நடுத்தெருவுக்கு வந்ததும் தான்!
வரலாறு கூறும் சான்று!!
மது மாது புகை போதைகளில்!
கரைந்து போனவை!
மன்னர்கள் மாநிலங்கள்!
மாளிகைகள் வளம்!
நலம் நற்பெயர் நிம்மதிகள்!!
சாத்தானின் பாதையில் சென்றோரால்!
நிரம்பி வழிகின்றன!
மருத்துவ மனைகள்!
சிறைச் சாலைகள்!
சுடு இடுகாடுகள்!!
காலங் காலமாய்!
இப்பழக்க வழக்கங்களுக்கு!
ஆளானோரின் தொகை !
வளம் கொழிக்கின்றதே தவிர!
தேய்பிறை யாகவில்லை!!
நாய்வால் புத்தியினர்!
நிறைவாய் இருக்கும் வரையில்!
சாத்தான்களுக் கென்ன குறை? !
-இமாம்.கவுஸ் மொய்தீன்

எப்படி புரியவைப்பாய்?.. காத்திருப்பு

செளந்தரி
1.எப்படி புரியவைப்பாய்?!
நீ என்ற மையத்தில்!
சுற்றும் என் உலகம் !
உன்னை மட்டும் வாசிப்பதில்!
தன் காலத்தை கரைக்கும்!
நீ இல்லாதபோது!
உன் மெளனம் மட்டும்!
என்னோடு வாழும்!
உனது சோகம்!
உனது குறும்பு!
நீ சொல்கின்ற பொய்!
அதில் தெரிகின்ற நேர்மை!
இறுகப் பற்றிக்கொண்டது என்னை!
புதிரான உன் உலகில்!
தினம் புதுமையாகும் நீ!
புதையலானாய் எனக்கு! !
வாய்விட்டுச் சொன்னேன்!
வார்த்தைகளை மறித்து!
நீ ஒன்றுமே இல்லை என்றாய்!!
நீ ஒன்றும் இல்லை என்றால்!
எப்படி புரியவைப்பாய் அதை எனக்கு!!
!
2.காத்திருப்பு!
யன்னல் வழியே எட்டிப்பார்க்கிறேன்;!
இருண்ட இரவு!
என் மனசைப்போல!!
ஊர் உறங்கியும்!
உறங்க மறுத்தன கண்கள்!
கனவுகள் தொடர்கிறது!
கனவுகளின் வெளிச்சம்!
காலத்தை கடக்கப் போதாது!
நினைவுகள் சுடுகிறது!
நினைவுகளின் காயம்!
கண்ணீரில் கழுவி முடியாது!
ஏனிந்த நாட்கள்!
என்தேசம் போல் நீள்கிறது!
நம்பிக்கையின்மை!
நாற்புறமும் போராடி வெல்கிறது!
தனிமையின் வெறுமை!
நிஐத்தையும் கேள்வியாக மாற்றியது!
ஒருகணம் அழுகிறது மனசு!
மறுநிமிடம் !
அடைகாக்கும் தாயாகச் சுரக்கிறது!
ஏனிந்தப் போராட்டம்?!
விடியலுக்கு காத்திருப்பு அவசியமோ?!
கசியும் என் இதயத்தை கட்டுப்படுத்த!
இருண்ட இரவில் !
தோன்றும் வெள்ளிபோல்!
என்னிடம் நீ வந்துசேர்!!
-செளந்தரி

குழந்தைச் செல்வங்கள்

வேதா. இலங்காதிலகம்
குழந்தைச் செல்வங்கள், குமுத மலர்க் கொத்துகள்.!
குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள்.!
உவகைமிகு சர்வதேச உயிர்ச்சிலைகள் மழலைகள்.!
உயிர் அதிசயங்கள், உணர்வுக் காவியங்கள்.!
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற!
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.!
உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்!
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.!
மனவாதை இருளின் ஒளி தேவதைகளின்!
மனங்கவர் புன்னகை, மழைமின்னல கீற்றுகள்.!
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.!
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.!
பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்!
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.!
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.!
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.!
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,!
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.!
கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,!
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,!
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,!
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,!
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.!
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்

வேண்டாம் உலக.. நிறைவேறாத.. தமிழே

கிரிகாசன்
வேண்டாம் உலக வாழ்வு.. நிறைவேறாத காதல்.. தமிழே தருவாயா?!
01. !
வேண்டாம் உலக வாழ்வு!
---------------------------------------!
சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்!
சிவந்ததோர் மாலைவிண்ணின்!
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக!
அடங்காத திமிரெடுத்த!
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்!
மகிழ்வான குருவியாக!
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக!
எம்மையும் படைக்காத தேன்?!
நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,!
நில்லாமற் தடம்புரண்டு!
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்!
ஆழியென் றாக்கலின்றி!
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே!
தூரமென் றின்பங்கொண்டு!
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்!
கோலமும் ஏன் படைத்தாய்?!
குலையான கனியாக கூடிடும்கொத்தான!
குறுவாழ்வு மலர்கள்போலும்!
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக!
தன்மானங் கூனலிட்டு!
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு!
இழையவும் தளதளத்து!
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்!
பிறவியுந் தந்ததேனோ?!
கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்!
கீழ்மையில் சிந்தைவாட!
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்!
வானத்தின் திசைகாட்டிட!
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்!
நேரிலே உடலூதியும்!
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்!
வெற்றுடல் தந்ததேனோ?!
மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்!
மாதேவி சக்திதாயே !!
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான!
பிறவியாம் மனிதமென்றே!
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்!
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து!
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை!
வேண்டா மிவ்வுலக வாழ்வு!!
02. !
நிறைவேறாத காதல்!
-----------------------------!
நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்!
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்!
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி!
வெண்முகில் தாவிவந்தேன்!
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத் !
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு!
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி!
தேன்நிலாவில் தேடினேன்!
கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்!
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை!
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு!
அன்பில் அளிக்கவென்றே!
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது!
மின்னிய வெண்ணொளியில் - அங்கே!
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட!
துள்ளிக் கடந்து சென்றேன்!
மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்!
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்!
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது!
கையள்ளி நீர்தெளித்தேன்!
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள!
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்!
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்!
சேரமுடிய வில்லை!
தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்!
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்!
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று!
பக்கம் இழுத்துவைத்தேன்!
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்!
சொல்லை விழுங்கிநின்றேன் - அட!
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா!
ஒன்றிட ஒட்டிவைத்தேன்!
ஆனவகையினில் ஆகாதவேலைகள்!
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்!
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென!
ஏதும் புரிவ தல்லேன்!
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்!
தேடியலைந்து சென்றேன் - ஆயின!
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை!
வேடிக்கை காணாநின்றேன்!
கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்!
கன்னம் பழமெனவும் அவள்!
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி!
வேதனை பார்வைதரும்!
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்!
ஏனோ மனதிற் கொண்டாள் - இள!
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்!
வந்து அணைப்ப தெப்போ?!
!
03.!
தமிழே தருவாயா?!
-------------------------------!
தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்!
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்!
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்!
உனையென்றும் பிரியாமை வேண்டும்!
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக!
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்!
திகழின்பத் தமிழான தென்றும்நற் பொலிவாகி!
தினமொன்று கனிந்தாக வேண்டும்!
சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற!
சுகமான உணர்வென்றும் வேண்டும்!
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்!
அதுகண்டு புகழ்கூற வேண்டும்!
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்!
உனதன்பு அதைமேவ வேண்டும்!
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை!
எழுந்தின்ப நதிபாய வேண்டும்!
குவை தங்கம்,கொடி ஆட்சி, குடிவாழும்!
ஊரென்று எது தந்தும் பரிசாகக் கேட்டும்!
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்!
அதிகாரம் அதில் உண்டுபோதும்!
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்!
கலையன்னை மடிமீது சாயும்!
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்!
காணென்று மனம்கூற வேண்டும்!
ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக!
என்றென்றும் பிரகாசம் வேண்டும்!
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை!
இதனோடு இழைந்தோட வேண்டும்!
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி!
தருகின்ற கவியாவும் என்றும்!
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி!
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

விடுமுறைதினம்

காருண்யன்
=காருண்யன்= !
ஒவ்வொரு விடுமுறை நாளும் !
ஏறக்குறைய இப்படித்தான் ஆகிறது !
இந்த நாளை எப்படி !
வித்தியாசமாக்கலாமெனச் சிந்தித்தபடியே !
பதினொரு மணிவரைக்கும் கட்டிலிலிருப்பேன் !
நீந்தப்போகலாமா? தண்ணியடிக்கலாமா? !
பிள்ளைகளை வெளியேகூட்டிப்போகலாமா? !
யாராவது பெரியவர்களைப் போய்ப்பார்க்கலாமா? !
பாதியில்விட்ட கதையைப் பூர்த்தியாக்கலாமா? !
புத்தக அலமாரியைத் தூசுதட்டலாமா? !
போஸ்ட்டில் புதிய நூலேதும் வராதபோதும் !
முடிவுக்குவர முன்னாலே மதியம் திரும்பிவிடும் !
மனைவி பெரிய செலவொன்றையும் !
அறிவிக்காதவரையில் பர்ஸானது !
மிதக்குமா தாழுமா மனஞ்சுழல !
விஷ்கியும் சிக்கன் ஃப்றையுமா !
'றம்'குப்பியும் சாடின் மீனுமா !
இல்லை பியரும் கருவாடுந்தானா? !
எக்காலத்தும் எல்லோராலும் !
சபிக்கப்பட்டாலும் இருக்கும் !
சில்லறையுடன் எப்போதும் தன்னை !
அட்ஜெஸ்ட் செய்துபோவது !
இளவெடுத்த !
இந்தச் சோமபானந்தான்! !
03.07.2005

யுத்தத்தின் குரல்

றெஜினி டேவிட்
பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது.!
நீல வானம் கறுப்பானது.!
எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது.!
எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது.!
ஐயோ ஐயோ இது கனவல்ல.!
போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்!
இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை!
என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள்.!
மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . . .!
அருகில் இருந்து கட்டியணைக்க ஆசை!
கண்ணீர் வற்றும் வரை கதறியழ ஆசை!
என்னைச்சுற்றி பல துப்பாக்கி முனைகள்:!
பயங்கர ஆண்களால், என் சகோதரியின் உடல்!
பலாத்காரப்படுத்தப்பட்டு, பயத்துடன் விறைத்துக் கிடக்கிறது!
இரத்தக் கறைகளுடன், கால் இழந்து கையிழந்து தரையில் துவண்டு!
அலறும் என் சகோதரர்களின் குரல் அதிகரிக்கின்றது!
இறந்த பெற்றாரை எழுப்ப தரையில் கதறும் எம் குழந்தைகளை,!
மிதித்து செல்கின்றன, வழி தெரியாப் பாதங்கள் . . .!
பயங்கர செல் துண்டுகளிடம் இருந்து – இரு உயிர்களை காப்பாற்ற,!
ஓடிய கர்ப்பிணி தாயின் இரண்டு கால்களும், சிதைக்கப்பட்டு தரையில் துடிக்கின்றன!
செல் துண்டுகள் என்னையும் சிதைக்க ஓடி வருகின்றன.!
நானும் பிணமாகமாட்டேன்.!
அந்த பயங்கரமான ஆண்களால் பலாத்காரப் படுத்தப்பட மாட்டேன்!
என்னை சுற்றி ஆறாக ஓடும் என் பிள்ளைகளின் இரத்த கண்ணீரையும்,!
சிதைந்து கிடக்கும் என் சகோதரனின் உடலையும் தொடர்ந்தும் பார்க்கமாட்டேன்!
(எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.)!
ஓடினேன் ஓடினேன் முடியவில்லை!
உறங்க வீடும் இல்லை.!
உயிர் வாழ உணவும் இல்லை.!
இரத்த வாடை கொண்ட சிவப்பு ஆடையை மாற்ற துணியும் இல்லை.!
காயங்களுக்கு மருந்தும் இல்லை!
கட்டியணைக்க கரங்கள் இல்லை!
அன்பான வார்த்தைகள் கூற யாரும் இல்லை!
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.!
பயங்கர கொடுமைக்காரர்கள் எமது கர்ப்பப்பையை சிதைத்தார்கள்!
தோழர்களின் கோபங்களால்!
எம் காயங்களின் மேல் துப்பாக்கியை நடக்க செய்தார்கள்.!
சமாதானம், மனித உரிமை பேசும் எம் நண்பர்கள் கூட!
மக்கள் குரல் கேட்காது போனார்கள்.!
அயல் நாட்டு நண்பர்கள், இறந்து கிடக்கும்!
எம் குழந்தைகளின் உடல் மேல் போர் ஒப்பந்தம் பேசிக் கொண்டார்கள்!
பலம் வாய்ந்த தலைவர்கள் தம் பதவி வெறி;க்கு!
வறுமையில் வாழும் முகம் தெரியா!
எம் காக்கி சட்டை சகோதரனை இரையாக்கி கொண்டார்கள்.!
உலகநாட்டு பிரதிநிதிகள், பலம் வாய்ந்த ஆண்களை காப்பாற்றுவதிலும்,!
பயங்கரவாத சட்டத்தை நிலை நாட்டுவதிலும் அக்கறை கொண்டார்கள்.!
எம் நிலைகண்டு: அனைத்தும் கற்பனை என்றார்கள் – என் நண்பர்கள்!
சுதந்திரத்தின் இறுதிக் கட்டம் என்றார்கள் – எம் நாட்டின் காவலர்கள்!
எம் இரத்தம், எந்தப் பகுதியை சார்ந்தது என்ற பரிசோதனைக்கு தயாரானார்கள் – என்!
தோழர்கள்!
பயங்கரவாதம் என்றார்கள்; – பிற நாட்டு நண்பர்கள்.!
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின!
பல வழிகளில் என் குரலை உயர்த்தி கூறினேன்:!
இல்லை: இவை கனவுகளும் கற்பனைகளும் அல்ல!
இல்லை: சுதந்திரமும் அல்ல:!
இல்லை: பரிசோதனையும் அல்ல!
இல்லை: பயங்கரவாதமும் அல்ல!
இவை:!
எம் இரத்தக் கண்ணீர்.!
இரத்த ஆறுகள்!
இரணத்துடன் கிழிந்துகிடக்கும் காயங்கள்.!
வலியுடன் இணைந்த குமுறல்கள்!
அமைதியை தேடும் விலையற்ற உயிர்கள்.!
30 ஆண்டுகளாக – எம் உடல்!
துப்பாக்கிகளாலும், செல் துண்டுகளாலும் துளைக்கப் பட்டு!
சிதைக்கப்பட்டு வீதியில் கிடப்பது – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?!
நின்மதி தேடி!
சமாதானம் தேடி,!
ஓடும் எம் பாதங்கள் – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?;!
எம் குழந்தைகளின் பிரேதங்களை – உன் கண்கள் எப்படிக் காண மறுத்தது?!
எம் கர்ப்பப்பையை- உன்னால் ஏப்படி சிதைக்க முடிந்தது?!
துப்பாக்கியும் செல்த்துண்டுகளும் பயங்கரமான பாதங்களும்!
எம் முகத்தை அழித்துவிட்டது.!
எம் குரலை புதைத்து விட்டது!
எமது குழந்தைகளின் பிணங்களின் மேல் – நடத்தும் போர்ப் பேச்சு வார்த்தையை!
நிறுத்து!
பயங்கர துப்பாக்கி முனைகளுக்கும், கொடூர கொலைகளுக்கும் துணைபோவதை நிறுத்து!
எம்மை, எம் குழந்தைகளின் எதிர்காலத்தை,!
அழிக்கும் உன் அநியாய செயல்களை நிறுத்து!
வன்முறையை நிறுத்து!
இரத்தம் காண்பதை நிறுத்து!
பசிக் கொடுமையை நிறுத்து!
எம் காயங்களை பார்க்க மறுப்பதை நிறுத்து!
யுத்தத்தை நிறுத்து!
பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்!
எம் குரல்; புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்!
உங்கள் பாதங்கள் எம் காயத்தின் கசிவை உணரும்வரை!
உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை!
உரத்து கத்துவோம் “யுத்தம் வேண்டாம்”

ஓடு மீன் ஓட

இப்னு ஹம்துன்
ஆழ்ந்தும்...!
ஒருமித்த மனதோடும்....!
என்னுள்ளும் தேடிப்பார்க்கிறேன்!
இன்னும் பணம்...!
இன்னும் பணம்... என!
எண்ணும் முதலாளிகளைப்போல!!
பறந்துவரும்!
பட்டாம்பூச்சியைப் போல!
வண்ணங்களாலும்!
வாசனைகளாலும்!
ஈர்க்கப்படவே செய்கிறேன்.!
காணும்போதெல்லாம்!
காதலை எதிர்பார்க்கும்!
விடலையைப் போல்!
கண்ணில் படுபவற்றை!
நிராகரிக்காமல்!
நிறுத்துப்பார்க்கிறேன்.!
பாகுபாடில்லாமல்!
ஏற்றுக்கொள்கிறேன் நதிகளை!
ஒரு கடலைப்போல்!!
என்றாலும்...!
எப்போதாவது தான்!
அகப்படுகின்றன!
எதிர்பார்க்கும் விதத்தில்!
கவிதைகள்!!
!
-- !
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

இரண்டு கவிதைகள்

சுப்பிரமணியன் ரமேஸ்
கவிதை ::1 !
நான் யாருக்கேனும் எழுதும் !
வரிகளிலும் உனக்கான !
வார்த்தைகள் இருக்கும் !
நீ யாருக்கேனும் இசைக்கும் !
கானத்திலும் எனக்கான !
இதமிருக்கும் !
அடையாளம் காணும் !
ஆழ் பரப்பில் !
அர்த்தப்படுகின்றன எல்லா வரிகளும் !
எல்லோருக்குமான பாடல்களும். !
!
கவிதை ::2 !
வண்ணம் மாறும் !
சோப்புக்குமிழிகளை !
கையிலேந்த ஓயாமல் துரத்திடும் சிறுமி !
அவள் புன்னகையை !
சேகரித்துக் கொண்டிருக்கிறான் !
குமிழ் ஊதுபவன்... !
குமிழாக சில காலம் !
புன்னகையாய் சில காலம் !
கழிந்தழியும் வாழ்நாள்

அவர்கள் துரத்த வேண்டிய வண்ணத்திகள்

ஸமான்
அசைவிழந்த சுவரோவியத்தில்!
தீனமாய் கேட்கிறது!
அவர்களுடைய பிஞ்சுக் குரல்கள்!
தூக்கு கயிறில் கழுத்தை இறுக்கியபடி!
கைகளை அசைத்துக் கொண்டிருந்தது!
அவர்களுக்கான கனவு!
விம்மி அழுதபடி!
திரித்த கயிறுகளில் பிணைக்கப்பட்ட!
இருள் தின்ற நிலாவும்!
உதிர்த எரி நட்சத்திரங்களும்!
துரு உறைந்த பெரு நிலங்களைவிட்டு!
பெயர்ந்து கொண்டிருந்தன!
கை பிடி வரிசைகளைப்போல!
நீளமாயும் குறுக்கலாயும் பாதைகள்!
முதுகு அழுத்தும் பாரத்தோடு!
துரிதமாக டடந்து கொண்டிருந்தார்கள்!
குழந்தை தொழிலாளர்கள்!
கந்தக குண்டுகளை உருட்டி விளையாடிய படியும்!
கிழிந்த பாடப் புத்தகங்களை!
மிதித்த படியும்!
அவர்களின் பெயர்வோடு கூடவே!
நகர்ந்து கொண்டிருக்கிறது நிலா!
அடிவான் நட்சத்திரங்கள் கருகி வீழ்ந்!
நதியின் குளிர்ந்த வெளியில்!
தாளப் பறக்கின்றன!
அவர்கள் துரத்த வேண்டிய!
அவர்களுக்கான வண்ணத்திகள்!
கண்ணீர் ஊறி!
தூக்கம் பாரித்த விழிகளின்!
பின் இருட்டில் மலை துகள்களை!
தின்று கொண்டே இருக்கிறது!
விடியல்களை தொலைத்த குழந்தை நிலா

கவனச்சிதறல்

ச.கோபிநாத், சேலம்
நம்பிக்கை துளிர்க்கும் தருவாயில்!
அதன் முனைகளை மழுங்கசெய்கிறது!
உனது வார்த்தைகள்.!
காதுகளை செயலிழக்க செய்து செவிடனாகி!
முயன்று முன்னேறுகிறேன்!
கண்களின் முன் சில செயல்கள் நிகழ்த்தி!
மீண்டும் திசை திருப்ப முனைகிறாய்.!
இப்போது கண்களை கட்டிக்கொண்டு!
கண்ணிருந்தும் பார்வையற்றவனாகிறேன்.!
தொடர்ந்து திசைதிருப்புகிறாய்!
என் கவனத்தை நீ!
தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன் நான்!
தீர்மானமாய் உணர்ந்துகொண்டேன் நான்!
திசைதிருப்புவதில் நீயும்!
இலக்கின் உச்சம் அடைவதில் நானும்!
நம்பிக்கையோடிருப்பதாய்