தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சென்னை

சேவியர்
அப்போதெல்லாம்
வெறும் ஐயாயிரம் தான்
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் நண்பர்

அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின்
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.

எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
ஏரியாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்

அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்

இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !

ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம்
என
பிற்காலத்தில் பேசக் கூடும்
நான்
என் மகனிடம்

- சேவியர் (http://xavi.wordpress.com/)

உன் நினைவோடு... நானிங்கு

மன்னார் அமுதன்
நீயங்கு,
நானிங்கு...
நாம் வாழும் வாழ்க்கையின்
முகவரி வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு

பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா!

நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா?

கானல் நீ....ராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்

கரம் பற்றி
நான் அணைப்பேன்
காதலினால்
நீ நனைப்பாய்

உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்

உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே வெல்கின்றேன்

பிழைப்பைத்தேடி

நதீர் சரீப்
பிழைப்பைத்தேடி
பறந்து சென்ற என்
ப்ரியமான கணவனுக்கு!

வேர்களை யாரும் இறந்த பின் புதைப்பதில்லை
சாகும் முன்பே புதைந்து வாழும் வேர்களாய் நீயும்
மறைந்து வாழும் அர்த்தம் என்ன?

நீர் தேடும் வேர்களாய் நீ
எத்தனை தூரம் ஓடினாலும்
பூத்துக் குலுங்குவதும் வெளிச்சத்தில் நிற்பதும்
பூக்களும் காய்களும்தான்...நீயல்ல

தூரத்தில் பொழியும் மழை வேண்டாம்
நமதருகில் விழும் சிறு தூறல் போதும்
வா!
உன்னை வேர்களாய் தொலைத்து
உன் வேர்வை உறுஞ்சல்களில்
நாம்
பூத்துக்குலுங்க வேண்டாம்.

அந்த வறுமையின் இருட்டிலும்
சேர்ந்துதானே இருந்தோம் - நீ
வெளிச்சம் வாங்க பறந்து சென்றாய்.
நம் பார்வையையே தொலைத்து விட்டது - 'தூரம்'.!
இரண்டுமே இருட்டுதான்!
வா!
பிரிவில் பார்வை இழப்பதை விட
ஏழ்மையின் இருட்டில் இருப்போம்.

வாழ்வின் வரைவிலக்கனத்திற்கு
வார்த்தைகள் தேடிச் சென்றாய்,
மொழியை மறந்து விட்டாய்.

எல்லாமே போதும்
நீ மட்டும் வந்து விடு!

- நதீர் சரீப் , அக்கரைப்பற்று

அழைப்பு

நந்தினி நீலன்
பாடி மகிழும் பறவைகளை
நாடி வரும்  தென்றலே!

ஆடி மகிழும் மயில்களை
தேடிச் செல்லும் மேகங்களே!

ஓடி மகிழும் ஆற்றினை
சென்று அடையும் மழைகளே!

கூடி மகிழும் பூக்களை
உரசும் வண்ணப் பூச்சிகளே!

தேன் சிந்தும் இதழ்களை
வென்று வரும் கீதங்களே!

என்னவனின் நினைவுகளை
சுமந்து நிற்கும் சேதிதனை

விரைந்து சொல்ல வாருங்களேன்
என் இனிய மன்னவனுக்கு

தடயம்

முஸ்தக் அஹ்மெத்
 
துவக்கம் - அன்று
தாயின் கருவறையில்
தந்தையால் இடப்பட்டு
கணவனால் இடர்பட்டு
துயரித்த கணங்கள்
பெற்ற மக்களினும் பேனாது விடப்பட்டு
அலைக் கழிந்த உடல்
இப்போது ’எனக்கான’ மண்ணறையில் !

தொடர்ச்சி - இன்று
அவர்கள் திரும்பிச்  செல்லும்
காலடியோசை கேட்கிறது
ரோமங்களின் சிலிர்ப்பும்
பரவசமூட்டும் ஆனந்தமுமாய்
எனது நிலைக்கலன்கள்  குதிக்கின்றன
மேற்கு நோக்கி இருத்தமுற்ற
இறுக்கமுறும் இருப்பில்
சுவாசம் மறந்து போன செவிப்புலனில்
தேய்ந்து போகும் ஓசைகள் இனிமையாய்
பார்வை தப்பிப் போன இருளின் வெளிச்சத்தில்
விடுதலை தேடி விழிகள்  விரிகிறது
மந்தகாச புன்னகையோடு
சர்மம் தீய்க்கும் சுட்டெரிக்கும் பார்வையாய்
சென்றவர்கள் விட்டுச் சென்ற காலடித்தடங்கள்
அவற்றில்
தூசி படியத் துவங்கும் முன்பே
எனக்கான சுகப்பயணம்
தடயங்களற்று இனிதே கழிகிறது!
 
- சு.மு.அகமது

இரங்கலுக்கு வருந்துகிறோம்

சு.மு.அகமது
சுவர் எழுதிக்கொள்ளும்
எனது இரங்கற்பாவை

அதற்குத்தான் தெரியும்
சித்திரத்தின் வலி

தீண்டல்களின் தோலுறியும்
சுவரதை நன்கறியும்

பூக்களின் சருமத்தில்
புகைச்சலின் பரிசம்
பூவோடு சருகும் கருகும்
மட்கிப்போயிருக்கும்
என் எச்சத்தின் மிச்சம்

நெட்டி முறித்திடும் சோம்பல்
நெடு நாளைய கனவாய்

ஒருக்களிக்கும் நினைவுகளில்
என் மரணம்

திருமண வாழ்க்கை

ஈஸ்வரி
காலங்கள் கடந்தன
கணப்பொழுதினிலே!

ஆண்டுகள் கடந்தன
விதி வழியினிலே!

மணமான மலர்பாதையானது
இருமனம் சேர்ந்த
திருமண பயணம்!

உயிர் கலந்த உறவு இது
என்று உலகம் உணர
உதித்தது புதிய நிலா!

சோகங்களை புன்னகை
வென்றது!
சுமைகளை நம் இமைகள்
வென்றது!

போதாது இருவர்க்கும்
நூறாண்டுகள்!
வரமாக கேட்கிறேன்
இன்னும் நூறண்டுகள்!

நரை கூடிப்பழுத்தாலும்
உயிர் காதல் உதிராது!

வாழ்த்த வயதில்லை
கவிபாடுது சிறுநெஞ்சம்

நித்திரை

புகழேந்தி
சுத்திச் சுத்தி தேடி பாத்தேன்
எங்கேயும் கிடைக்கலையே
பல இரவுகள தொலைச்சு அலைஞ்சு பாத்தேன்
அப்போதும் காணலியே
இருளில் தொலைச்ச அத
அம்மா மடியில தலை வச்சு சாஞ்சதுமே
அதுவா வந்துடுச்சே

காதல்

சலோப்ரியன்
 
ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது!!!
 

நிகழ்வின் ரகசியம்

பா.தேவேந்திரபூபதி
காலமும் இடமும்
தீர்மானிக்கின்றன நிகழ்வை

இடம்
தமதான போது
காலம் இறக்கைகள் மூடி
வாயிற்படிகளில்
இரைதேடி அலையும்

காலம்
தாழ்பணிந்து கிடக்கையில்
அகிலமே போதாத இடமாய்
தோன்றக் கூடும்
இரண்டும் சேரும்
ஒரு பொழுதில்
இல்லாதிருப்போம் என்றைக்கும்