தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உரிமை

புகழேந்தி
தெரு விளக்கிற்கும்
உன் மேல் ஆசையடி
உன்னை கண்டதும்
விளக்கனைத்தது - தன்னை
தவிர யாரும் -உன்னை
பார்த்துவிடக் கூடாது
என்பதற்காக

திசை மாறும் தென்றல்

வேலணையூர் தாஸ்
காற்று அவள் முற்றத்தில்
வீசமறுக்கிறது
ஏனோ அங்கு வந்து திரும்பும்போது
காற்று கனமாகி போகிறது
முன்பெல்லாம்
அந்த வீட்டின் புன்னகையை மகிழ்ச்சியை
அள்ளி ஆனந்தமாய் சென்ற தென்றல்
இப்போது சோகம் சுமக்கிறது
அழுகையும் கண்ணீரும் அள்ளிக்கனக்கிறது
முற்றம்  பெருக்கி
முழுவதுமாய் நீர் தெளித்து
நிற்கும் தலைவன் நிழல் தேடி சலிக்கிறது
அவன் தோள் ஏறி ஊர் பார்க்கும சிறு பிள்ளை
புன்னகையில் தோய துடிக்கிறது
இருள் முடும் பொழுதொன்றில்
சென்றவன் தான் இன்னும் திரும்பவில்லை
ஒளியிழந்து இருண்டு கிடக்கிறது இல்லம்
அவள் விழி நீர் வழிந்து கிடக்கிறது வாசல்
தென்றல் அந்த சோகம் சுமக்க அஞ்சி
திசை மாறி செல்கிறது

அப்பாவின் டெய்லர்

கே.ஸ்டாலின்
அளவு சட்டையெல்லாம் வேண்டாம்
துணியை மட்டும்
கொடுத்துட்டு வா- என்பார் அப்பா
காதிலிருக்கும் பேனாவால்
புதுத்துணீயின் மூலையொன்றின்
கைகள் தோள்பட்டை
உடலின் அளவுகளை
மனப்பாடமாய் எழுதுவார்
அப்பாவி பிரத்யேக டெய்லர்
ஆயத்த ஆடைகள்
அறிமுகம் ஆகும் முன்னர்
உள் பாக்கெட் வைக்காமல்
இவர் தைத்த ஆடைகளை
சிறுவயதில் அணியாமலேயே
அடம் பிடித்திருக்கிறேன் நான்
விபத்தொன்றில்
உடல் நசுங்கி அப்பா இறக்க
அடையாளம் காட்டியது
காலருக்குப் பின்னிருந்த
எஸ்கே என்ற குறியீடுதான்
பெரிதாக்கப்பட்ட முகத்தையே
சில ஆண்டுகளாய்
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க
இன்னமும்
இவர் நினைவுகளில்
வாழ்ந்துகொண்டிருக்கூடும்
அதே நீள அகலங்களுடன் அப்பா

ஊர்ந்து போகும் வாழ்க்கை

சிந்தாமணி
கடுமையான வெயிலில்
சூரியன் படபடக்கிறது
பார்க்கும் வயல்வெளியெங்கும் தூரம்
முகம் வயல்காற்றில் அடிக்கிறது
சுமையும் குடை
மரம் தூரத்தில் ஒற்றை
கானல் போலும் பம்புசெட்
கொட்டும் நீரில் வாத்துக்கள்
கணுக்காலளவு பச்சை நெல்நாற்றுக்கள்
நடுவே தெரிவது களை மட்டுமே

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்

கண்ணதாசன்
தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!

சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!

எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!

இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!

விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!

- கண்ணதாசன் (இயேசு காவியம்)

ஒளிரட்டும்

எழிலி
ஒளிரட்டும்
ஒவ் வொருவரின்
வாழ்வும்!

மத்தாப்புத் தொழிற்சாலையில்
கருகிய மொட்டுகளுக்காக!

பலகாரக் கடைகளில்
பாகுகளோடு
பாகாய் இளகிய
பிஞ்சுகளுக்காக!

பருத்தித் துணிகளை
பட்டு இழைகளைத்
தறியில் நெய்யும்
படைப்பாளிகளுக்காக!

தையல் கடைகளில்
காஜா எடுக்கும் ஏழைக்
குழந்தைகளுக்காக!

ஆடை -
விற்பனைக் கடைகளில்
கால் கடுக்க நிற்கும்
உழைப்பாளிகளுக்காக!

மளிகைக் கடைகளில்
பலசரக்குப் போட
பம்பரமாய்ச் சுற்றும்
பணியாளர்களுக்காக!

கொண்டாட நினைத்தேன்
தீபாவளி!
என்
சேமிப்பைக் கரைத்து
அவர்களின் கணக்கை
உயர்த்தத் துணிந்தேன்!

அவர்களின் உழைப்பில்
ஒளிர்வது என் தீபவளியானால்
என் உழைப்பில் அவர்களும்
மகிழட்டும்!  
எல்லோருக்கும்
இன்பம்  மட்டுமே-இந்தத்
தீபாவளி  கொடுக்கட்டும்

விடுமுறை

இரா. முருகன்
நரகல் தெருக்களில்
சோனி எருமைகள்
கறந்த பாலில்
விடியும் காலையும்,

ஃபைல்களை வளர்த்து
ஃபைல்களைத் தின்று
ஃபைல்களைக் கழியும்
யந்திரங்களுக்குச்
சேவை செய்து
தேய்ந்த பகலும்,

பெட்ரோல் நாறும்
மாலைப் பொழுதும்,
காற்று ஓய்ந்து
புழுங்கும் இரவும்,
எனக்கே யானது
என்றிருந்தேன் இதுவரைக்கும்

நகரக் கழிவுகள்
கழித்த ஆறும்,
மரங்கள் செத்த
வெற்று மலையும்,
கட்டிடம் உயரும்
நஞ்சையின் தரையும் கூட
எனக்குத் தானாம்

புள்ளியில் மறையும் சூட்சுமம்

சு.மு.அகமது
 
பிசாசுகளை பிசாசு என்று
சொல்லக்கூடாது நாம்
புள்ளியில் மறைந்திருக்கலாம்
படைப்பின் சூட்சுமம்

மனிதனின் தேடுகையும்
மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம்
பிசாசு என்று சொல்லாதீர்கள்
உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில்

நான் பிசாசா என்று
என் பிசாசிடம் கேட்கிறேன்
அரூபமாய் புள்ளியில் மறைந்து போகிறது
வீரியமற்ற கனவின் மிச்சம் போல அது

வெட்கவானின் சினறிய பொழுதுகள்
வீறிட்டு அலறுகையில்
கையில் விளக்கேந்தி
புதுச் சொல் தேடுகிறது பிசாசு
தன் பெயரை அழகாக்கிக்கொள்ள

மிச்சத்தில் உழல்கிறான் மனிதன்
தானே பிசாசாய் ஆகிவிட்டது போல்

கோரமுகம்

ப.மதியழகன்
பொம்மை விளையாட்டு
காதல் விளையாட்டு
வியாபார விளையாட்டு
மது விளையாட்டு
மங்கை விளையாட்டு
மழலை விளையாட்டு – என
ஏதேனும் ஒரு போதை
எந்நாளும் தேவைப்படுகிறது
வாழ்க்கையின் கோரமுகத்தைக்
காணச் சகிக்காமல்
முகம் புதைத்துக் கொள்வதற்கு

உனக்குள்ளே

பாரதிபிரியா
நீயும் நானும் கைகோர்த்து
நடந்து சென்ற, கடந்த நாட்கள்,
கண்களில் கனவுகளாக!

புதுப்பாடல் போல புனிதமான
உன் அன்பு, எனக்குள்ளே!
புதுவரவாய், புதுவசந்தமாய்,
உன்னுள் விழவைத்தது!

சோர்ந்துபோன இதயம்
உன் வரவால் உயிர்பெற்றது.
பட்டாம்பூச்சி வாழ்க்கையில்,
பூபாளமாய் உன் வரவு!

பனித்துளியினும் தூய்மையான
நின் நேசத்தில், நான்
நிலைகுலைந்து போனது, உன்
அன்பின் ஆழத்தை சொல்லும்!

என் உயிரை திருடிவிட்டு
உள்ளத்தை மட்டும் விட்டுவிட்டாய்.
அது ஆழ்ந்த  உன் அன்பு அருவிக்குள்
தத்தளிக்கிறது...
கரையேறமுடியாமல்