சொல்வது தவறென்றால் சொல்லுங்கள் - மன்னார் அமுதன்

Photo by FLY:D on Unsplash

வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்!
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை!
காற்றுப் புக மூக்கினிற்குக் கருணை காட்டுங்கள் - என்று!
கையைக்கட்டி வாழுமினம் நாங்களுமில்லை!
சமர்ப்பணங்கள் எமக்களித்த பண்டிதர் பலர்!
சன்மானம் கிடைத்தவுடன் ஓடி விட்டனர்!
அமர்க்களமாய் வாழ்ந்த வாழ்வை புறக்கணித்தவர்!
சமர்க்களத்தில் மாண்ட நாளை மறந்துவிடவோ!
பூக்கொடுத்துக் கைகுலுக்க எமக்கும் சம்மதம்!
புறமுதுகில் குத்திவிட்டால் யார்க்குப் பாதகம்!
ஆண்டுகளாய் ஆண்ட இனம் அழிந்து போகையில்!
ஆடு கண்டு கவலைப்படும் நரியை நம்பவோ!
சொத்து சுகம் தேடி இங்கு வந்த மக்களே!
பத்து ரூபாய் பெற்றுக்கொண்டு காட்டிக் கொடுத்தனர்!
வெற்றிடங்கள் விளைநிலங்கள் கூறு போட்டனர்!
வீண்நிலங்கள் என்று கூறி விற்றுத் தின்றனர்!
ஆலும் வேலும் நிறைந்த மண்ணில் போதி நட்டனர்!
போதி நன்றாய் தழைப்பதற்கெம் இரத்தம் விட்டனர்!
தழைத்த போதி வேரைத் தேடிக் கல்லை வைத்தனர்!
இளைத்த இன‌த்தின் மீது ஏறிக் குலவை இட்டனர்!
உலகிலொரு மூலையிலே எனக்கும் நிலமுண்டு!
உரிமை முழங்கும் கவிகளுக்கு என்றும் உயிருண்டு!
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்!
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.