மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
மற்ற மரமெல்லாம் வேர்த்து வேர்த்து
மனப் புழுக்கத்தின் குலுங்கல் - அதில்
வந்து கனிந்தவை பழங்கள்! பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
பழங்களினால் உலகில்
பாக்கிஸ்தானில் நடந்தது போல
பாகப் பிரிவிணை நடக்கும்
புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
புரட்சிப் பழங்களினால்
புண் வயிறு சிரிக்கும்
பொலிவிழந்த உடல் செழிக்கும்
மறுபடியும் உழைப்பதற்குப்
புதுவலிமை பிறக்கும் சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
சிங்காரம் செய்வதற்குப் பூச்சாரங்கள் தொடுக்கும்
பாவடைக் காரிகளின் நளின விரலோடு
பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!
அந்த நார்கள்
என்னுடைய
உடை உரிப்புக்கள்
சத்தம் போடதா
சதைக் கிழிசல்கள்!
பூவைப் போல் உயர் பிறப்பு
இல்லாத நாரை
பூக்களுடன் சேர்த்து வைத்துச்
சம மரியாதை
வாங்கித் தந்ததென்
சுய மரியாதை!
என் மட்டைச் சட்டையோடு
சேர்ந்த நாசிக்குச்
சுறுசுறுப்புக் கொடுக்கும்
மூக்குப் பொடியின்
தூக்குத் தூக்கி!
புகையிலைத் தூளின்
பொட்டலப் பெட்டகம்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை - மு மேத்தா("வாழை மரத்தின் சபதம்")
மு மேத்தா