திறந்த ஜன்னலின் வ்ழியே
விரிந்த சிறகுகளோடு
வந்ததொரு வண்ணத்துப் பூச்சி
அதை நோக்கி அகல
விரிந்ததென் எண்ணத்துப் பூச்சி
ஒளி சிந்தும் விளக்கைச் சுற்றி
ஓயாமல் வட்டம் போட்டது
தொங்கும் ஆடையில்
தோரணையாய் அமர்ந்து
ஏதோ திட்டமும் போட்டது
சின்ன சிறகுகள்
எங்கும் பறக்கலாம்
எவர் மீதும் அமரலாம்
விரல் கொண்டு பிடிக்க வரும்
சிறுவரிடம் விளையாட்டும் காட்டலாம்
இதுவல்லவா வாழ்க்கை
இப்படியொரு கவிதையெனக்குள்
கருவாகிக் கொண்டிருக்கையில்
பல்லியொன்று வண்ணத்துப்
பூச்சியை விழுங்க
பாவம் பூச்சியென்று
கவிதை தன் கருவிலேயே
கலைந்து கொண்டது
சலோப்ரியன்