மனிதனிடம் இல்லையோ இயற்கை நியதி!
வேதா. இலங்காதிலகம்
ஆடைகள் உரித்து நிர்வாணமாய் சருகுகள் உதிர்த்த மரங்கள்.!
மேடைகளிடா அலங்கார முருகு! அதுவும் வரங்கள். !
மூவாசை துறந்த மனங்களாக, முதிர் ஞானஒளி நிலையாக!
முகவரி காட்டி முக மயக்கி முகிழும் இயற்கை.!
கலையுளமிருந்தால் மரங்களை ரசிக்கலாம், அன்றேல் காத்திருக்கலாம்.!
விலையற்ற காத்திருத்தலில் பூமி தேவியைப் போல!
இலைதுளிர் காலவருகைக்கு, வலையென இலை விரிகைக்கு – தருக்கள்!
இயற்கை நியதியில் வாழும். இவற்றை மறந்த மனிதர்களாக அல்ல.!
பூமி தன்னைத் தானே சுற்றி பகலவனையும் சுற்றும் நியதி!
புரளும் நிலையானால் சர்வநாசம் உலகினில்.
மனைவி கணவனைச் சுற்ற, கணவன் மனைவியைச் சுற்றும்!
பிணைவில் நியதி தவறுவதேன்! இணைவில் தவறு நிகழ்வதேன்!!
செம்புலத்தில் பெய்த நீராக சேர்வதில்லை சிலர் அன்பினால்.!
எண் புலத்தில் வல்லவனாம் மனிதனில் இல்லையோ மரத்தின் நியதி!!
இலை துளிர் காலத்து இலக்கணம் கலைமிளிர் மனிதனிடம் இல்லையே!!
இம் மனிதன் இயற்கையிலும் கீழ் மகன் தானோ?.!