வண்ண இயற்கைத் துறைமுக மென்று!
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.!
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று!
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.!
நல்ல பொருளாதாரத் திட்டம் என்று!
சில்லுச் சில்லாகச் சின்ன நாட்டை!
பல்லிளித்துக் கொடுக்கிறார் பலன் எடுக்க,!
கையளித்து ஆப்பிழுத்த குரங்கு ஆகிறார்.!
முன்னைய சனாதிபதி பிரதம மந்திரிகள்!
பின்னி முடிச்சாக்கிய இனப் பிரச்சனை!
பென்னம் பெரிய விசுவரூபம் எடுத்து!
சின்னா பின்னம் ஆக்குகிறது பல்லுயிர்களை.!
கொல்லும் வெறி கொண்ட தலைமை!!
நல்ல போர் நெறியற்ற இராணுவம்!!
எல்லாமாய் ஈழத்தில் செய்யும் கொடுமை,!
சொல்லும் தரமன்று! இல்லையொரு தர்மமங்கு!!
வல்லுறவுப் பாலுறவு! வயது முதிர்ந்;தோர்,!
செல்ல மழலைகள் விதிவிலக்கின்றி அழிக்கிறார். கல்லுளிமங்கனையும் கரைக்கும் நிகழ்வுகளங்கு!!
செல்லுகளிலும் இரத்தம் கொதித்துப் பாயும்!!
பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது!!
ஊரங்கு அழியுது! உயிரங்கு பிரியுது!!
யாரங்கு கேட்பது! ஆண்டவனும் உள்ளாரோ!!
சீரற்ற நாடகம் அரங்கேறி ஆடுது
வேதா. இலங்காதிலகம்