மனவெளிக்குள்
ஏதோவொரு வெற்றிடம்
எதைப் போட்டு
நிரப்புவது அதை
இரு விளிம்பு
நிலைகளுக்கு மத்தியில்
என் மனம் ஊசலாடுகிறது
தவறுகளைத் திருத்திக் கொள்ள
கடந்த காலத்தில் நுழைய முடிந்தால்
நன்றாக இருந்திருக்கும்
காலில் முள் தைத்தாலும்
கண்கள் தான் அழுகிறது
சாலையோரத்தில் குடியிருப்பவர்களுக்கு
வானமே கூரையாக அமைகிறது
நேற்று தந்த முத்தத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை
உன்னைக் காணும் போதெல்லாம்
ஆனந்தத்தில் கண்கள்
பனிக்கிறது
ஒவ்வொருத்தருடைய முடிவும்
யாரோ ஒருவருக்காக நெருடலாக
அமைகிறது
உறக்கத்தில் மனக் குப்பைகள்
எரிகின்றன
உள்ளக் கோப்பை காலியாகிறது
ப.மதியழகன்