இருவரிப் புலவன் புகழ் பாடினாய்!
வள்ளுவனை மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.
இரு வரிகளில் என்ன, இப்பூவுலகில்
இரு சொல்லிலும் கவிதைகள் உண்டென்றேன்.
இரு சொற்களிலா கவிதை? என்றாய் நம்பாமல்.
'உன் சிரிப்பு' என்றேன் உன் பார்வையைப் பிரியாமலே.
சிரித்துக்கொண்டே 'இன்னும் ஒன்று' சொல்ல சொன்னாய்.
'நம் காதல்' என்றேன் சிறு நம்பிக்கையோடு!
ஒரு நொடி உன் பார்வை புயலுக்குள் சிக்கித் தடுமாறினேன்.
'போதும் போதும்' என்றே செல்லமாய் கோபித்துக் கொண்டாய்.
'ஒரு சொல்லில் கவிதை முடியுமா??' என்று சவால் விட்டாய்.
மருகனம் மீண்டது மனம்! மெதுவாய் 'நீ' என்றேன்.
விழிகளுக்குள் என்னைப் புதைக்கும் உன் விழிகளை
ஆழப் பார்த்தேன். அருகில் வந்து அணைத்துக்கொண்டாய்.
சொல்லொன்றும் இல்லாமலே கலந்துவிட்டேன் நான் உன்னோடு.
என்றும் சொல்லே இல்லாமல் கவி பாடும் நீ என்னோடு
நதி