சமுத்திரமே
உனக்கு ஏன் இந்தக் கோபம்
நகருக்குள் புகுகின்றாயே
கருநாகம் போல் படமெடுக்கின்றாயே
என்ன தீங்கு விளைவித்தோம் நாங்கள்
காலன் முடிக்க வேண்டிய கணக்கை
கடலலைகளை ஏவிவிட்டு முடிக்கின்றாயே
கடலன்னையென்று உன்னை அழைக்கின்றோமே
உனது புத்திரர்களையே காவு வாங்கத்
துடிக்கின்றாயே
மகிழ்ச்சியாகப் பொழுதினை போக்க
கடற்கரைக்கு வந்த ஜனங்கள் மீது
உனது சீற்றத்தை ஏன் காட்டினாய்
உனது விஸ்வரூபம் தான்
மறுநாள் செய்தித்தாள்களில்
முதல் பக்கத்தை நிரப்பியது
எத்தனை பேரின் கனவுகளை
மண்ணில் புதைத்தாய் நீ
போரின் பேரழிவை மிஞ்சியதே
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவங்கள்
தீராத பசியுடன் நீ இருக்கின்றாய்
உனது வேட்டைக்கு பலியாக
நாங்கள் இருக்கின்றோம்.

ப.மதியழகன்