கண்டுகொண்டேனடி - ந.பரணீதரன்

Photo by Tom Podmore on Unsplash

பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே !
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ !
ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு !
என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ !
மனதின் உள்ளே மையல்கொண்டு !
வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய் !
உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க !
முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன் !
உன் குரலோசைக் குயில் கீதத்தில் !
வார்த்தைகளை மிழுங்கும் !
அந்த நிமிடத்தில் !
என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான !
உன் சிம்பொனிச்சிரிப்பில் !
என் கவிதைகளை நிராகரித்த உன் !
மனதின் பயப்பிராந்தில் !
நான் கண்டுகொண்டேனடி. . !
உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை !
என்தன் நினைவுகளால் !
உடையும் உன் பிஞ்சு இதயத்தை !
நானே அறிந்தேனடி. . !
புன்னகை சிந்தும் உன் !
பூவிதழ்களின் மேலே !
உறக்கம் மறந்த உன் !
விழிப்பாவையினுள்ளே !
பூமி கீறும் உன் !
பிஞ்சு விரல்களினுள்ளே !
நான் கண்டேனடி . . !
என்தன் காதல் ஒளிந்திருப்பதை !
வெறுத்த உன் உள்ளம் !
என்னை விரும்பி அழைப்பதில் !
சிறுத்த உன் இடை அடிக்கடி !
சிலிர்த்துக்கொள்வதில் !
கருத்த கூந்தல் எப்போதும் !
சோர்ந்து வீழ்வதில் !
நான் கண்டேனடி . !
கசங்கும் என் இதயத்தை
ந.பரணீதரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.