I, II, III & IV!
01.!
வினை வந்தது!
-------------------!
கண்கள் சிவந்திட நெஞ்சம் கனந்திட காண்பது யார்இவளோ?!
பெண்ணின் குணமிழிந் தென்னைக் சினந்திடும் பேதையின் பேரெதுவோ ?!
வண்ண முகம்பெருந் தீயெழுந் தாடிட வந்தவள் யார்மகளோ?!
எண்ண மெடுத்தவள் என்னநி னைத்தனள் எப்படிச் சொல்லுவளோ?!
மின்ன லெனவந்து நின்றவளே யுந்தன் மென்முகம் வாடுவதேன்?!
நன்னரும் மேனி நலங்கெடக் கோபமுன் நெஞ்சி லெழுந்ததுமேன்?!
”பன்னுரும் சேனை படைகொண்டு வீரம்பகை வென்ற தால்மனதில்!
என்னரும் வாழ்வு இழிந்திடச் செய்திடல் எண்ணுவ தாகிடுமோ?”!
அன்னவள் பேச்சில றிந்திட ஆஇவள் அந்தியில் தாமரைகள்!
பன்னள வென்று செறிந்த பளிங்கென்னும் பொய்கையில் நீந்தியவள்!
முன்ன ரெழுந்தவெஞ் சூரியன் மாலையில் மேற்கில் சினமெழுந்து!
தன்னிலை கெட்டு தணல்கொதி கொண்டு கடல்கண்டு வீழுகையில்!
மென்தளிர் மேனியில் தொட்ட களிப்பினில் துள்ளிடும் நீரலைகள்!
வந்து கரைதனில் மண்ணி லுருண்டு விரைந்து புரண்டுசெல்ல!
விந்தை பொலிந்திட வானக் குளத்திலோர் வெண்மதி நீந்துவதாய்!
இந்த மகளிள மான்குளிர்ப் பொய்கையில் இன்பநீராடக் கண்டேன்!
கண்கள் மறந்துமே சிந்தை யிளந்தவள் காரிகை யின்எழிலில்!
அண்ணள வாயொரு கண்ணிமை நேரமயர்ந்தது நிச்சயமே!
எண்ணியொருந் தவறேது மிழைத்திலேன் என்னவென்றே பகர்வாய்!
கண்ணியம் கொண்டு கணமிடம் நீங்கிய காட்சி தெரிந்திலையோ!
”புன்னகை கொண்டுநின் பேச்சில் மயங்கிடப் பேதை யல்லயிவளோ!
கன்னம் பிடித்திவள் கன்னியின் பொன்னிதழ் கைவிரல் தொட்டதுவும்!
இன்னும் அடம்பிடித் தாவல் கொண்டேயிவள் ஆசையில் கொஞ்சியதும்!
பொன்னில் வளர்ந்தவ ளென்று பசற்றிய பொய்யும் மறந்ததென்ன?!
கன்னியிவள் உடல் கற்பில் மாசுஎழக் காரிய மானவரே!
என்னவென் றேயொரு நீதிசொல் லச்சபை முன்னேயெ ழுந்தருளும்!
பின்னையி ராப்பக லோடு கலந்திடும் போதில் அரசமர!
திண்ணையடி வந்து சேரு”மெனச் சொல்லித் தென்றலென நடந்தாள்!
02.!
நீதியைத் தேடி!
--------------------!
அன்னம் நடைஅசைந்தாடுமிடை எழில்வண்ண மயிலெனவே!
எண்ணமது சிதைந்தோட அவள்நடை கண்டுமன மிழந்தேன்!
வண்ணங் குழைத்த நல்மாலைவரஅவள் வஞ்சியின் சொல்லினுக்கே!
திண்ண மெடுத்திவள் செய்வதுமோச மென்றுண்மை பகரச்சென்றேன்!
மஞ்சள் நிறவெயில் மாலைக் காற்றின்கீதம் மாந்தரின் பேச்சினொலி!
பஞ்சென வேதுள்ளி வஞ்சமில்லா தோடும்பாலகர் கொஞ்சுமொலி!
நெஞ்சைக்கவர்ந்திட சங்கீததாளமும் நேரெதிர்காதிற் கொண்டேன்!
சஞ்சலங் கொள்மனம் பஞ்செனஒத்தடம் செய்தது மாலையெழில்!
சின்னஇதழ் விரித்தின்ப மணமெடுத் தேங்கின பன்மலர்கள்!
தின்னவருங் கருவண்டை அசைந்தாடித் தேடின பூங்கொடிகள்!
தன்னவர் வந்திடுங் காலமென இல்ல நங்கையர் பூமுடித்து!
சின்ன அகல்விளக் கேற்றி ஒளியிட்டு சித்திர மாகிநின்றார்!
நெல்மணி தேடிய புள்ளினங்கள் வானில்நீளப் பறந்துவர!
புல்லைக் கடித்தது போதுமென்று பசுபோகும் வழி திரும்ப!
கல்வி பயின்றிடத் திண்ணை அயல்சிறு கன்னியர் கூடியதும்!
சல்சல் சலவென்று சலங்கை குலுங்கிட சின்னவர் ஆடியதும்!
கண்டுமனதினில் கொண்ட உவகைகள் கொஞ்சமல்ல நடந்தேன்!
கொண்டையில் பூவிடும் நங்கைதனை அயல்கண்டு அருகணைந்தேன்!
வண்டையுரித்தன இரண்டுகண்கள் என்னைகண்டு மருண்டிருக்க!
செண்டைமலரொத்தசின்ன இதழென்னும் பூவை மலரவைத்தாள்!
வந்திடவே செய்யீ ரென்றெண்ணவே ஆகா..வந்தீர் அதிசயமே!
சிந்தையி லென்னையும் கொண்டதனாலேயே வந்ததுநிச்சயமே!
இந்தளவே போதும் உங்கள் நினைவுடன் என்றுமே வாழுவேனே!
எந்தநினைவுடன் சொன்னவளோ அவள் நெய்விழி பூத்ததுநீர்!
பித்துப்பிடித்தவள் போலப்பிதற்றிடும் பெண்ணே பெரியோர் எங்கே!
சித்தம்பிழைத்தவள் உன்னை நம்பியிங்கே சேர்ந்தேன் மடமையிலே!
எத்தன் செய்யும்வேலை இட்டவளே இனி என்னைமறந்துவிடு!
இத்துடன் யாவும் நிறுத்திவிட்டாலே பிழைத்தனைஓடிவிடு!
கட்டியணைத்துமே கன்னியென்னை உஙகள் கைகளில் இட்டவரே!
விட்டு விலகிட எண்ணியிருப்பது விந்தையில் விந்தையன்றோ!
தொட்டதனாலேஎன் தூயமனதினில் தோன்றிய வேதனையை!
விட்டு நலங்கொளச் செய்தலன்றி ஒரு வேடிக்கை வேண்டியதோ!
அந்தர வானிலேகூடுகட்டி அதில் ஆனையின்முட்டைவைத்தேன்!
விந்தை நாலுகுஞ்சு வந்ததடாஎன்று வீணில் பசப்பும்பெண்ணே!
உந்தன்மொழி பொய்என்னிடம் செல்லாது போதும் நிறுத்திவிடு!
சுந்தரியே சொல்லு சேதிகேட்கும் சபை சென்றது எங்கேயிங்கு!
சொல்லி முடிக்க முன்வந்தவரோ ஒருசித்திரக்கேலி யென்னும்!
ஒல்லி உருவமும் ஓங்கிய நெற்றியும் ஊடேசிலமுடிகள்!
நல்லது உங்கள் வழக்கென்னகூறுவீர்! நங்கையே சொல்லிடுவாய்!
வல்லவர் சொல்லியபோது புரிந்ததுவந்தவர் ஊர்தலைவர் !
!
03. !
பொய்யுரைத்த பேதை!
------------------------------------!
சின்னவள்தான் இவள் சொல்லும் உண்மையிது சிந்தை மயக்கியவர்!
எந்தன் கனவினில் வந்து நின்றார் இருகன்னம்தழுவிநின்றார்!
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன் பின்னலைநீவுகிறார்!
முன்னமிருந்து முகம்பிடித்தேமுழு வெண்மதிஎன்குகிறார்!
ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல உத்தமமானவரே!
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே வந்து நெஞ்சில்புகுந்துவிட்டார்!
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை ஆரத்தழுவி விட்டார்!
போருக்குவீரனாம் பெண்மனதுள் வந்துபித்தனாய் ஆடுகிறார்!
பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம் பாம்பின் விஷம்என்குது!
காலைவரை கண்ணை மூடினும் பக்கமாய் சேரத் துயில்நாணுது!
வாலை பருவமும் நோயானது என்வண்ணம் குலைந்திடுதே!
சேலை யிருப்பதே பாரமென்று பெருந் தீயில் உடல் வாடுதே!
கண்கள் பனித்தன தொங்கி இமைதனில் கண்ணீர்த்துளி திரண்டு!
பொன்னெனும் கன்னம்கடந்து இதழ்ழெனும் பூவில்கலக்கக்கண்டேன்!
சின்னை இதழ் கசந்ததுவோ, அவள் செவ்விதழ் கோணலிட்டாள்!
என்னைகடைவிழிகொண்டு கண்டுஇதழ் மீண்டும் விரித்துரைத்தாள்!
பூவிழிமூட முடியவில்லைஒரு பொழுதும் தூக்கமில்லை!
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒருநல்ல உணர்வுஇல்லை!
ஆவிதுடிக்குது எண்ணியொரு ஆனந்தகீதம் இசைத்தபடி!
கூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த கோலமென்றாகிவிட்டேன்!
காற்றாகி வந்து கலகலத்தே என்னைக் கைகளால் நீவுகிறார்!
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய் ஆடையைதள்ளுகிறார்!
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியிலோடி பெருகுகிறார்!
வேற்றுமையின்றியே வேண்டுமொருநீதி வேதனைபோயிடவே!
கொட்டியதுபல பொன்விளை காசென கொல்லெனவே நகைத்து!
பட்டெனக் கைதட்டிப் புன்னகைத்து சபாஷ் பார்த்தகனவா என்றார்!
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஏய் நிற்கும் இளையபெண்ணே!
குட்டிகதை கேட்கக் கூட்டிவந்தாய் இது குற்றம் எனச்சினந்தான்!
செம்புயலாகவேசீறிப் பகைவெல்லும் சீராளன் வீரனே பார்!
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே வேடிக்கையானதுகாண்!
அம்புவிழிகொண்ட ஆரணங்கின் பக்கம் அர்த்தமுளதோ நீசொல்!
நம்புவதா இதில்நானெது கூற நீ நல்லொரு தீர்ப்பளிப்பாய்!
செந்தழல்வீசிய சின்னவளின் முகம் சோர்ந்து துவளக் கண்டேன்!
எந்தளவோ ஓர் எல்லையற்ற சோகம் அங்கவள் மூச்சில்கண்டேன்!
மந்தமெனும் இளம்புன்னகையிலொரு மாசறு காதல் கண்டேன்!
செந்தமிழ் செல்வியின் பின்னும் கதையிலே நேசமிழைதல்கண்டேன்!
பொல்லா மனம் கொண்ட பொய்மகளே ஒருபோதும் மன்னிப்பேயில்லை!
வல்லவன் என்னிடம் சொல்லியவை தந்த வெஞ்சினம் போகவில்லை!
நல்லதொரு நீதிநான் சொல்லுவேனென நங்கையை நோக்கி நின்றேன்!
கல்லில் சிலையென கண்கள் பனித்திட கன்னம் சிவக்க நின்றாள்!
!
04.!
தீர்ப்பு!
-------------!
புன்னகைத் தாள்அவள் பூமலரும் அந்தப்போதை விழிமயக்க!
முன்னமிருப்பது பெண்ணாவளோ ஒருமேகத்தின் தேவதையா!
என்ன விழைந்தது என்மனதில் அவள் ஏற்றிய தீ எரிந்தே!
சின்னதென எழும்வேகம் பரந்திட செய்வதுஎன் திகைத்தேன்!
உந்தன் கனவதில் வந்தவன் நானென கூறிய பொன்மகளே!
எந்தன்கனவிலும் வந்துவிடு எனக்கின்னல் விளைத்துவிடு!
சிந்தும் உன்புன்னகை பங்கம் இழைத்தவன் கண்களில்நீ புகுநது!
தந்துவிடு இவன் தந்தபொருளவை ஒன்றும் குறைவின்றியே!
தொட்டுஇழைத்தவை அத்தனையும் நீயும் தொட்டு அளித்துவிடு!
பட்டு இதழ்களில் முத்தமிட்டால் நீயும் முத்தம் கொடுத்துவிடு!
கட்டியணைத்தை கட்டியணை நீயும் கட்டளையிட்டுவிடு!
கொட்டிகுவித்த குற்றமெல்லாம்ப்தில் குற்றமிழைத்துவிடு!
உந்தன் மனதினில் காதலை தீயிட்ட காளையிவன்தனுக்கு!
சிந்தனையெங்குமே தீயிட்டு காதலின் தீமை உணர்த்திவிடு!
சந்தணமேனியில் செய்தகுறும்புகள் அத்தனையு மெழுதி!
தந்ததைப்போல தழுவிக்கொடுத்திடு தீரும்கணக்குஅதற்கு!
செந்தணல்வீசும் சிலையெனக் கண்டவள் இந்தக்குளிர்நிலவா!
சுந்தரம் வீசிடும்பூந்தென்றலா இல்லைச் சுழலும்வன்புயலா!
சிந்தும் சினமின்றி சேயிழை கண்களில் சேர்ந்ததுமுத்துக்களா!
செந்தூரவாயி னிதழ்கள் துடிப்பது இன்ப கலக்கத்திலா!
செவ்வரியோடிய கண்கள்மயங்கிடச் சற்றுநிமிர்ந்துநின்றாள்!
திவ்வியரூபமாய் சுந்தரிபொன்னெழில் தேகமெடுக்க கண்டேன்!
கொவ்வைஇதழ்களில் புன்னகை பூத்துக் கொஞ்சமருகில் வந்தாள்!
எவ்விதம் உங்கள் கனவில்வருவது ஏழைஅறியே னென்றாள்!
சொன்னவை அத்தனை நான்புரிவேன் ஆனால் சொப்பனமல்ல வென்றாள்!
முன்னே இருந்து அளித்திடுவேன் ஆனால் மொத்தமாயில்லை யென்றாள்!
சின்னச் சின்னதெனத் தந்திடுவாய் நானோ சேர்த்துக் கணக்கிடுவேன்!
என்ன கொடுப்பதில் வஞ்சனைசெய்திடில் வட்டிஎடுப்பே னென்றேன்!
மன்றநடுவரைக் காணவில்லை அவர் மயமாய் ஏகிவிட்டார்!
தென்றலே போதுமா தீர்ப்பு பிழைத்ததா தேவையைக்கூறு என்றேன்!
கன்றிளம் மானுடை துள்ளலுடன் அவள்கண்களில் மின்னொளியாய்!
நின்று இதுகன வில்லை என்றுஎன் நெஞ்சில்முகம் புதைத்தாள்!
(முடிந்தது.)

கிரிகாசன்