சிரிப்பதும் அழுவதும் ஏன்??.. வேண்டும் சக்தி.. மழை நின்ற அதிகாலை நேரம்!
!
01.!
சிரிப்பதும் அழுவதும் ஏன்??!
-------------------------------------!
நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்!
நித்திய சூரியனே - நினைப்!
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்!
பாரிலிருக் கையிலே!
கால விதியிதோ மாலைமதி கெட்டு!
காணும் பிறை யொளியாய்-பலர்!
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்!
கூடியிருப்ப தென்ன?!
மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை!
மேவி இருள் பரவும் - அதி!
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்!
காணும் இரண்டுவிதம்!
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்!
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்!
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை!
மீது துயில் சிலர்க்கும்!
கானமிடும் நல்ல வானில் குருவிகள்!
ஊர்வலம் செய்யழகும் அங்கு!
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென!
கோலமிடும் எழிலும்!
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்!
தீபங்கள் வைத்தவளோ - மன!
மானது ரம்மிய மாகக் களித்திட!
மஞ்சள் நிலவு வைத்தாள்!
ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு!
அத்தனை கோபங்கொண்டு - பல!
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட!
மின்னலை கொண்டுவைத்தாள்!
வானம் அழுவது போல மழையுடன்!
வாரிப் புயலடித்து - பெரி!
தான முரண்படும் பேய்மழை ஊதலும்!
ஏனோ நிகழவிட்டாள்!
பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்!
பூவுலகே யறியும் - அலை!
மேவுகடல் மீது மீனழுதால் அலை!
யோடு கலந்துவிடும்!
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்!
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி!
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்!
தாலும் துயர் இருக்கும்!
பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து!
பற்றிடத் தேவையில்லை - மலர்க்!
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட!
வீழும் விதிமுடியும்!
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்!
நெஞ்சில் குடியிருக்கும் -இதை!
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்!
உண்மை நிலைதிகழும் !
!
02.!
வேண்டும் சக்தி!
-------------------------!
அழகான ஓடை அதிலோடும்நீரும்!
அரும்பான மலர் போலும் வாழ்வும் !
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும் !
இதை மிஞ்சும் விதமான அறிவும் !
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள் !
விதமாக துயர்போக மகிழ்வும் !
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும் !
படர்கின்ற மனம் வேண்டும் தாயே! !
கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும் !
கொத்தும் வல்லூறாகக் குணமும் !
மதிவானில் குறையும் மழைதூற துளியும் !
மணல்வீழும் நிலை தாழவேண்டாம் !
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும் !
கரை ஏறக் குடிகாணும் அழிவும் !
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி !
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும் !
நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம் !
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா !
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும் !
வருந்தாத உள்ளங்கள் வேண்டும் !
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம் !
பழமென்று இனிதான உறவும் !
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம் !
புன்னகை புன்னகை வேண்டும் !
குயிலோசை கூவும் குரலின்பந் தானும் !
கனிவோடு காதோரம் செல்லும் !
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும் !
விளைவான எதிரோசை வேண்டாம் !
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம் !
படும்தூறல் மழைகண்ட தோகை !
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும் !
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும் !
!
03.!
மழை நின்ற அதிகாலை நேரம்!
---------------------------------------!
தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில் !
தரும்மழை ஓய்ந்துவிட !
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல் !
தீர்ந்தொரு அமைதிபெற !
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச் !
சிவந்திடும் வான்வெளிக்க !
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை !
விடியலில் வெளிநடந்தேன் !
கலகல வென ஒலி எழுமதி காலையில் !
கதிரவன் வரும்திசையில் !
பளபள எனும்ஒளி பரவிட இருளவன் !
பயமெழத் தலை மறைந்தான் !
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக் !
கூடிய தூவானம் !
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில் !
சிணு சிணுத்திடக் காணும் !
சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச் !
சடுதியில் நீர் பெருகி !
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக் !
கிளர்வுடன் அதுவிரைய !
மளமள எனவளர் மரங்களும் நீரிடை !
மலர்களும் சருகுதிர்த்தே !
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும் !
வியனுறு கலை வியந்தேன் !
வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை !
வடிவுடன் தாமரைகள் !
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித் !
தளர்வுற இதழ் விரியும் !
பளபள எனவெயில் பகலென வருமுதல் !
பறவைகள் துயில் கலையும் !
படபட என அவை பரப்பிய சிறகுடன் !
பறந்திடும் வான் வெளியும் !
கடகட வெனஉருள் காளைகள் வண்டியில் !
கவினுறு சந்தமெழும் !
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும் !
அழகினை அவைபேணும் !
மடமட எனமது வருந்திய வண்டினம் !
மலர்களில் மயங்கிவிடும் !
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை !
கொண்டிட அழதுகொழும் !
எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில் !
எழும்விழும் பின்னுயரும் !
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென !
அடுத்ததை செய உணர்த்தும் !
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர் !
குலவிடும் இனிதென்றலும் !
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக் !
கொண்டிடச் செய்தகலும்
கிரிகாசன்