எழில் கொஞ்சும்.. நெஞ்சில்.. பிரிவின் - கிரிகாசன்

Photo by Jan Huber on Unsplash

எழில் கொஞ்சும் ஈழம்.. நெஞ்சில் ஒரு முள்ளாக.. பிரிவின் சோகம்!!
01.!
எழில் கொஞ்சும் ஈழம்!
-------------------------------!
பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்!
பட்டு மேனி தொட்டு ஓடும்!
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி!
சற்றுக் குனிந்துநெல் ஆடும்!
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்!
ஆலோலம் பாடிப் பறக்கும்!
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி!
ஈழமென்னும் தமிழ்த் தேசம்!
மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு!
மேனியில் முத்துக்கள் தோன்ற!
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்!
ஓர மடுக்கிடும் பெண்கள்!
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட!
மையலுறு இள மைந்தர்!
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி!
இன்பங்கொளும் ஈழதேசம்!
கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு!
கால்கள் தாளமிட ஓடும்!
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்!
விட்டுத் துரத்திடக் காணும்!
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்!
பெற்றவர் கைபிடித் தேகும்!
எட்ட இருந்திடும் கோவில் குளமென!
ஈழதேசம் எழில்காணும்!
நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே!
நீலவிண்ணில் முகிலோடும்!
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்!
தொங்கு மணிநாதம் கேட்கும்!
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு!
வண்ண மலர் தலையாட்டும்!
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்!
பூச்சிகள் தேனுண்ண நாடும்!
எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்!
ஏந்திழை கண்ணென மீனும்!
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்!
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்!
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்!
தென்னைகளில் இளநீரும்!
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்!
சூழல்கொள் ஈழ மெம்நாடு!
நீள அலை விரித்தாடும் கடலதில்!
நெய்குழல் மங்கையர் போலும்!
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்!
அத்தனையும் மறைத்தாடும்!
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்!
மூடிவைத்த குவை தேறும்!
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்!
தோணிகள் ஓட்டிடும் தேசம்!
வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை!
தாவி மரந்தனில் ஏறும்!
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு!
விட்டு ஒருஅணிலோடும்!
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி!
கோதிகிளி யொன்று பேசும்!
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா!
காணென்று யாரையோ தேடும்!
பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை!
புல்விரிந்த பசும்தேசம்!
தேவரின் வானுல கானது தோற்றிடும்!
தீந்தமி ழீழம் எம்தேசம்!
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்!
சிங்களமே பழியாகும்!
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது!
பாதைமாறித் தெற்கும் சேரும்!
காலமெனும் சுழல் சக்கரமானது!
கீழும் மேலும் நிலைமாறும்!
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்!
காலை பகல் என்றுஆகும்!
கோலம் அவரது கொண்டது மாறியே!
கூடி யழுதிட நேரும்!
சீலமுடன் நம்ம தேசமமைந்திட!
சேரும் வளங்களோ மீளும்!
02.!
நெஞ்சில் ஒரு முள்ளாக...!
----------------------------------------!
கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ!
அலைந்தாடு கடலின்திரை யன்னவளை யுடலும்!
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்!
குலைந்தோடு முகிலினிடை குலவுமதி யானள்!
சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்!
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்!
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்!
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்!
வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை!
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்!
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி!
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்!
எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு!
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று!
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை!
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்!
பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்!
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்!
களித்தாடி அவளருகில் காணவென விழைய!
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்!
அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்!
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே!
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்!
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்!
கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்!
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்!
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே!
செய்வதெது அறியாது சேவை எனதென்றேன்!
நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி!
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று!
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி!
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்!
03.!
பிரிவின் சோகம்! !
-------------------------!
(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை)!
தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை!
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்!
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட!
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு!
கன்றென ஏதும் பயமறியா துள்ளி!
கன்னிஅவள் கொண்ட சின்ன - உளம்!
இன்று என்னபடும் பாடென எண்ணியே!
ஏங்கும் தந்தைமனம் தேற்ற!!
வந்து தழுவிய வாசமலர் மணம்!
வாடும் எனதுடல் தேறி - இன்பம்!
தந்து விலகியபோது அவள் எண்ணம்!
தாவி எழுந்தது மீள - உயர்!
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்!
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்!
விந்தையின்று வெறும் வெட்டவெளியென!
வேடிக்கையானது கொல்ல!!
கைவிரல் பற்றியே கட்டழகன் மீது!
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்!
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன!
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்!
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்!
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்!
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்!
மாறிக்குணம் கொள்ளலாமோ!
கண்கள் குளமென ஆகிடவே இங்கு!
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு!
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே!
போனதுமோ வெகு தூரம் இதை!
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்!
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு!
வெண்ணிலவு வெறும் வானமதில் என!
வீட்டினுள் காய்திட லாமோ!
!
நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்!
நேரெதிரே வரும்போது -மன!
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்!
மாயம்தனை மனமெண்ணி - வரும்!
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு!
அந்தி வந்த பொழுதோடு - அந்த!
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு!
வேக நடை கொண்ட தேனோ?!
ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி!
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்!
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்!
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்!
ஆடும் உலகதில் நாமறியோ மிது!
அத்தனை உறுதி என்றேன் -அது!
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட!
பூமி சுழல் கின்ற தென்றேன்!
யாவும் எமதென இல்லையம்மா இந்த!
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்!
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்!
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு!
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்!
பூமியும் எம்மது இல்லை அந்த!
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்!
வானமும் சொந்தமா? அறியேன்
கிரிகாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.