வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்!
வீசியது சூறைக்காற்று, மழையுடன்!
கெட்டி மேளமிடு சத்தமென வானம்!
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட!
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு!
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ!
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்!
கோலமன்றோ கணநாதா!
மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்!
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்!
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்!
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு!
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்!
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,!
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்!
கோலமன்றோ கணநாதா!
பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல!
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்!
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை!
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்!
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை!
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு!
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்!
கோலமென்று சொல்லலாமோ?!
ஏறிவிழுந்த மனிதன் துடித்திட!
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட!
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட!
துன்பமிடும் புயல்காற்று நடந்திட!
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி!
மங்குமிருள் மறைபாதை நடுவினில்!
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்!
சேர்ந்து வரலாமோ நாதா!
பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட!
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட!
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்!
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து!
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்!
கூக்குரலிட்ட கணவன், சிரசினை!
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு!
ஆனதும் ஏன் கணநாதா!
புட்டவிக்க தின்று போட்டஅடி வாங்கி!
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு!
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே!
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு!
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை!
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்!
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை!
கேட்க வாடா கணநாதா! !
கிரிகாசன்