(ஒரு ஈழமகனின் கேள்வி)!
வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து!
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்!
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்!
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே!
கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப!
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே!
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.!
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.!
'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்!
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்!
ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,!
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!!
என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்!
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்!
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென!
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்!
'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி!
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்!
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்!
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.!
நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்!
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி!
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?!
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????

கிரிகாசன்