புத்தக இரவல் கோரல்களிலும்!
அசௌகரியச் சூழ்நிலைச் சீர்கேட்டின் நொந்தல்களிலும்!
முளையிட்டுத் தொடங்கும் இரயில் சிநேகம்!
அடுத்துப் பின் பெயர் பரிமாற்றங்கள்!
எங்கே எதற்காய் எப்பொழுதென்ற!
ஒவ்வொருவருக்கான பயணப் பிரயாசைகள்!
அப்படியா! அங்கேயா!!
எதிர்பட்டவரின் தனக்குண்டான ஏரியாத் தொடர்புகளை!
இழுத்து வளைத்து நுழைத்து!
பேச்சிழுக்கும் கைங்கர்யங்கள்!
பின் இருந்ததை விடுத்து இல்லாததை எடுக்கும்!
சிறிய மற்றும் பெரிய தத்தமது உண்டி மாற்றங்கள்!
வழிப்படும் வழிகளையும்!
அப்பகுதி மொழிகளையும்!
அவரவர் ஆய்வுகளில் நிறைதல்களும் குறைதல்களும்!
நிறைந்து கிடக்கும் உறவுக் குவியல்களில்!
புதியதோர் மாமா அத்தையை!
மழலைக்குச் சொல்லிப் பின் கேட்டு!
மகிழ்ச்சியில் மனங்கள் குதூகலிட்டு!
கண்டிப்பாய் தன்னில்லம் வர வேண்டுமென்றும்!
இயல்கையில் தானும் வருவதாகவும்!
உறுதி மொழிகள் கூடிய முகவரிகள் மாற்றி!
என்னதான் உறவுக் கீதமிசைத்தாலும்!
சலவையில் சிக்குண்டுச் சீரழிந்த!
அச்சிதிலத் துண்டுச்சிட்டு காண நேர்கையில்!
நெற்றி சுளிக்கவே செய்கிறேன் யாரென்று!!
!
-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ