கழிந்த எல்லா நாட்களைப் போலவே!
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது!
என் வழிப் பாதைகள்!
மரங்கள் தூவும் மகரந்தப் பூக்களும்!
மனம் இளக்கியோடும் மெல்லிய காற்றசைவுகளும்!
அவ்வசைவுகள் கொண்டு சேர்க்கும்!
பறவைச் சப்தங்களும்!
வானச் சூரியனின் விசையழுத்தமற்ற இளஞ்சூட்டுக் கதிர்களும்!
பயண வாழ்த்துக்களிடும் பாதை வழியர்களும்!
என் பாதை பக்கமும் படுப்பதில்லை!
படர்ந்து நீண்ட பிரயாசைப் பிரயாணங்களில்!
தனித்துப் போகிறது என் பாதை மட்டும்!
இரவு தாண்டிய என் கனவுகள்!
என் வழி நோக்கிய பாதைகளிடுகின்றன!
என் மனம் ஆட்கொண்ட கனவுத்தூதுவனொருவன்!
எனக்குண்டான திசை தீட்டுகிறான்!
கழிந்த கால கருமாந்திரங்களைச் சாடியும்!
அதைப் போலல்லாதொரு புது விதி தேடியும்!
சீரழிந்துச் சிதைப்பட்ட!
கதையொன்றைச் சொல்லிச் சொல்லியே!
பிரயாசையூட்டுகிறான் அப்பாதை வழி கிளர்ந்தெழ!
உருவங்களும் உணர்வுகளுமற்ற அத்தூதுவனின்!
வார்த்தைகளற்ற வழி கூறும் அவன் மொழிதல்களில்!
எது எப்படி எதற்கென்றறியா ஒரு கரு நோக்கி!
சதா ஏற்றத்தில் ஏறிச் செல்கிறது!
பின்னடைவுகளுற்ற என் பிரயாணங்கள்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ