வனச்சிறுவனின் அந்தகன்.. தூறல் மழைக் காலம்!
01.!
வனச்சிறுவனின் அந்தகன் !
-------------------------------------!
சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை!
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி!
மிகக்கடின பணியொன்று!
வனச்சிறுவனுக்கிடப்பட்டது !
எந்தக் கொம்பிலும்!
ஏறித் தேனெடுப்பவன்!
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி!
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்!
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்!
அமாவாசை நிசியிலும்!
அச்சமின்றிப் போய்வருபவன்!
முதன்முதலில் அயர்ந்து நின்றான்!
கட்டளையை மறுக்க வழியற்றும்!
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்!
விதிர்த்து நின்றான் !
செய்வதறியாச் சிறுவன்!
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து!
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்!
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்!
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்!
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ!
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ!
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி!
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்!
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென!
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின!
வண்ண வண்ண மீன்கள் !
கற்றுக் கொடுக்கவேண்டிய!
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி!
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்!
விடியலின் கீற்றுக்கள்!
மலைகளின் கீழால் புதையுண்டு போக!
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட!
மழை தூவிற்று !
வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி!
செவிட்டூமைக் குருடனை!
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி!
தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்!
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி!
எல்லாக் கேள்விகளுக்கும்!
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன் !
!
02.!
தூறல் மழைக் காலம் !
------------------------------!
குளிர் காற்றினூடான வானம்!
இளநீலம் !
மெல்லிய நீர்த்துளிகள்!
இசை சேர்த்து வந்து!
மேனி முழுதும் தெளிக்கின்றன!
நீண்ட காலங்களாக!
சேகரித்து வைத்த அன்பை !
அமானுஷ்ய ஈரத்தோடு!
தளிர் விட்டிருக்கும் அகத்தி!
பெண் நெற்றிப் பொட்டு வடிவ!
பச்சை நீளிலை மரத்தில்!
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்!
ஏழெட்டுக் கிளிகள்!
செந்நிறச் சொண்டுகளுடன்!
மாதுளம்பூக்கள் !
தனிமையை அணைத்தபடி!
அடுத்த பாடலை!
நான் ஆரம்பிக்கலாம்!
அதன் பிண்ணனியில்!
மழையும்!
நதியின் ஈரலிப்பும்!
குளிரின் வாசனையும்!
இதே பசுமையும் என்றுமிருக்கும் !
நீயும்!
என்னுடன் இருந்திருக்கலாம்

எம்.ரிஷான் ஷெரீப்