01.!
நுழைதல்!
-----------------!
எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்!
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி!
உன் நேசத்தைச் சொல்லிற்று!
பசியினைத் தூண்டும் சோள வாசம்!
காற்றெங்கிலும் பரவும்!
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை !
முடித்து வந்திருந்தாய்!
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்!
பெண்களின் சித்திரங்களை!
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்!
வெயிலெரித்த சருமத்தின் துயரம்!
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்!
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது!
நகரும் தீவின் ஓசை!
நீ நடந்த திசையெங்கிலும்!
பாடலாகப் பொழிந்திடக் கூடும்!
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்!
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்!
உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்!
உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு!
எல்லாம் கடந்துவிட்டன!
நேற்றிருந்த மேகத்தைப் போல!
இக் கணத்து நதி நீர் போல!
உனது பயணங்கள் முடிவற்றன!
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன!
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து!
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது!
பாளங்களாய்க் கனன்றெரிந்து!
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று!
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட!
தெப்பமென நனைந்தேன்!
நரகப் பெருநெருப்புக்கஞ்சி!
எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று!
நீ வரத் திறந்தது!
அன்று!
உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ!
உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை!
உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்!
எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்!
ஆனாலும் சகா!
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்!
அப்பாலுள்ளது எனதுலகம்!
02.!
விலகல்!
----------------!
அடைமழை பெய்தோய்ந்த!
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி!
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்!
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்!
பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன!
பல்லாயிரம் விழிகள்!
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து!
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை!
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி!
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது!
பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்!
புற்றெழுப்பும் கரையான்களைக்!
கொத்த வரும் சாம்பல்குருவிகளை!
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்!
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்!
நாம் கதைத்தபடியே நடந்து கடந்த!
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை!
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின!
விடிகாலையில்!
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்!
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை!
உன்னைப் போலவே!
!
03.!
தெளிதல்!
-------------------!
ஏமாற்றத்தின் சலனங்களோடு!
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்!
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது!
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்!
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்!
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்!
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன!
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை!
மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்!
ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன!
நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்!
மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்!
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது!
மிக எளிய ஆசைகள் கொண்டு!
நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ!
புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது!
வெளிச்சம் எதிலுமில்லை!
கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்!
அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது!
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க!
அலைகளும் எங்குமில்லை!
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது!
எந்த நேசமுமற்று எப்பொழுதும்!
உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்!
ஏமாற்றத்தின் முதல் தளிரோடு!
ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று!
நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை!
04.!
மலையுச்சிப் பூவின் தியானம்!
-------------------------------------------!
கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது!
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்!
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை!
அந்திப் பறவைகள்!
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்!
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்!
உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்!
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்!
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்!
நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது!
யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்!
தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்!
கருங்கற் குகைகளிடை வழி!
உனது பயணப் பாதையல்ல!
நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்!
கடவுளுக்கானது!
காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்!
உதிக்கும்!
மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்!
உனது இலக்குகளில்!
பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்!
எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்!
தாமதியாதே!
வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்
எம்.ரிஷான் ஷெரீப்