நரகல் தெருக்களில்
சோனி எருமைகள்
கறந்த பாலில்
விடியும் காலையும்,
ஃபைல்களை வளர்த்து
ஃபைல்களைத் தின்று
ஃபைல்களைக் கழியும்
யந்திரங்களுக்குச்
சேவை செய்து
தேய்ந்த பகலும்,
பெட்ரோல் நாறும்
மாலைப் பொழுதும்,
காற்று ஓய்ந்து
புழுங்கும் இரவும்,
எனக்கே யானது
என்றிருந்தேன் இதுவரைக்கும்
நகரக் கழிவுகள்
கழித்த ஆறும்,
மரங்கள் செத்த
வெற்று மலையும்,
கட்டிடம் உயரும்
நஞ்சையின் தரையும் கூட
எனக்குத் தானாம்

இரா. முருகன்