மனமென்னும் வீணைதனில் இசைக்குதிந்த தமிழ் ராகம்!
மழலைப் பருவத்திலே விளைந்ததிந்த தமிழ் மோகம்!
நினைவென்னும் ஆழ்கடலில் மிதக்குதிந்த கவிதா யாகம்!
நிற்காமல் பொழியும் எண்ணமென்னும் மொழி மேகம்!
விழிமூடும் வேளயிலும் கனவாக மிதக்குமெந்தன் தாய்மொழியே!
வழியெங்கும் தோரணங்களாய் கவிதைப் பூக்கள் அலங்கரிக்கும்!
!
எனை வரவேற்க காத்திருக்கும் தமிழ்மொழியின் இனிய சந்தங்கள்!
என்றும் எனை வாழ வைக்கும் இனிய கவிதை வரிகள்!
காலமெனும் கப்பலில் காததூரம் கடந்து விட்டேன் நண்பா!
காணும் காட்சியெங்கும் கற்பனைப் பூக்களாய் மலர்கின்றதே!
!
மீதியுள்ள வாழ்நாளில் விரல்களின் வளைவினால் விளையட்டும் எழுத்துக்கள்!
மனிதனிவன் மனதினிற்கு நல்கவிதை தானெ என்றும் நிம்மதி!
மீண்டுமொரு பிறப்புண்டு என்றேதன் இறை சொல்வானெனில்!
மறுபடியும் மிதக்கவிடு தமிழ் தேனாற்றில் என்றே நான்!
!
மனமுருகி வேண்டிடுவேன் ; அன்னை தமிழே அருளிடுவாய்!
மழையாக பொழியட்டும் அப்போதும் தமிழ்க் கவிதைகள் !
!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்