வறுமை துயர் நீங்க வேண்டும்
வாசல்தோறும் வளங்கள்
வழிய வேண்டும் – என்ற
மீட்பின் குரலோடு
அரியணையில் அமர்ந்தோர்
வாக்குறுதிகள் காற்றில் கலக்காது
வாணவேடிக்கையாய் – பல
வண்ணங்களில் மின்ன வேண்டும்!
‘ஆட்டம் பாமாய்’ வெடித்து
நாள்தோறும் பயமுறுத்தும்
விலைவாசி ஏற்ற இறக்கங்கள்
வாழும் வேட்கையை-
தகர்க்காது காக்க வேண்டும்!
நிம்மதி – சரவெடியாய்
படபடத்துச் சரியாமல்
சிந்தை பூக்கும் ஆசைகள்
அணை தாண்டி மகிழ வேண்டும்!
மதுவில் மயங்கி – உழைத்தும்
வீடு சேரா ஊதியத்தால் – பசி
பட்டினிச் சாவெனும் அவலங்கள்
சங்குச்சக்கரமாய் – நித்தமும்
வாழ்வை சுற்றாத நிலை வேண்டும்!
சின்னச்சின்ன
ஆசைகளின் வண்ணக்
கனவுகளில் மத்தாப்பூ சிதறல்கள்
பூத்துச் சிரிக்க வேண்டும்!
பொய், புரட்டு, சூது, லஞ்சமென
புதுப்புது முகமூடிகளுடன்
திரை மறைவு பொம்மலாட்டங்கள்
எரி குச்சியாய் கரைய
புது உதயம், புது வாழ்வென
புத்துணர்ச்சி பொங்க வேண்டும்!
எண்ணங்கள் – மறந்து
ஆசைகள் – துறந்து
வாழும் வழிகள் – இழந்து
வாசல் விட்டு வீதியில் தவித்தலின்றி
கிழக்கு வெளுக்கும் நாௌல்லாம்
எம்மக்களுக்கு – தினந்தோறும்
தீபாவளியாக வேண்டும்!
- செல்லம் ரகு, திருப்பூர்
செல்லம் ரகு