நகரின்
தடங்கள் அனேகமாய்
பராமரிப்பில் மேம்பாட்டில்
ஒன்று அடைபட
ஒன்று திறக்கும்
காத்திருப்பின்
கடுமைக்கு
வழிமறிப்பே
குப்பையின்
எதிர்வினை
சுதந்திர வேட்கை
அடிக்கடி
சாக்கடைக்குள்
பீறிட்டெழும்
மண் வாசனை
நெல் மணம்
மாங்குயிலின் கூவல்
தும்பி தேன்சிட்டு
என்னுடன் கோலத்தில்
புள்ளிகளாய்
இருந்த காலத்தின்
தடம்
மங்கலாய் மிளிர்ந்து
மறையும்
நகரம் நீங்கிச்
செல்லக் காணிக்கை
தந்தாலே
நெடுஞ்சாலை
அனுமதிக்கும்
ஆளுயரச் சக்கரங்கள்
விரையும் வாகன
வீச்சிலும் தென்படும்
கோடுகள் இல்லாப் புள்ளிகள்
மட்டும்
காய்ந்த மண் நெடுகத்
தடமே இல்லை
அரியதாய் எங்கோ
ஈர மண்
அதுவும் சுமக்கும்
டிராக்டரின் தடம்
சத்யானந்தன்