இன்று...தானாய் விழும் அருவி!
01.!
இன்று!
---------!
இன்று!
சமையல் கியாஸ்!
தீர்ந்து விட்டது.!
இன்று!
மார்கழி மாதக் குளிர்!
சில்லிட்டு இருந்தது.!
இன்று!
சாலையில் பார்த்த!
ஒருவன் இடதுகண் மூடிக்!
கட்டுப்போட்டிருந்தது.!
இன்று!
(இதுவரை சிரிக்காத)!
நண்பன் ஒருவனின்!
இடைவிடாத சிரிப்பைக்!
காண நேர்ந்தது.!
இன்று!
வந்த கடிதமொன்றில்!
நண்பன் தன்!
முதல் மனைவியின்!
நினைவு நாள்!
நாளை என்று!
எழுதியிருந்தான்.!
இன்று!
எழுத முயன்ற!
கவிதையில்!
பெரிதும் சோகம்!
கவிழ்ந்தது.!
இன்று!
இந்தக் கவிதை!
தானே தன்னை!
எழுதிக் கொண்டது.!
!
02.!
தானாய் விழும் அருவி...!
------------------------------------!
கண்கூசும் வண்ண ஒளி மேடையில்!
களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.!
நெடுநாள் கழித்துப் பார்க்கும்!
நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.!
புடவை நகை பற்றிப் பேசவென்றே!
புறப்பட்டு வந்திருந்த பெண்கள்.!
நாற்காலிகளுக்கு இடைப்பட்ட!
நடைபாதைப் பாய்விரிப்பில்!
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டு!
உள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து!
மகன்மேல் ஒரு கண்ணோடு!
மடிமேல் தாளமிட்ட மங்கை.!
குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி!
அரங்கெங்கும் நடந்தபடி இருந்த !
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?!
ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்!
கைதட்டல் சத்தத்தை யாருக்கோ!
கேட்கச் செய்துகொண்டிருந்தவனின்!
இசையார்வத்தை எதில் சேர்க்க?!
எப்பொழுதும் நிகழக்கூடும்!
இவளின் அழைப்பை எண்ணி!
கைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.!
தன்னளவில் எதற்கும் பொதுவாய்!
தானாய் விழும் அருவியென!
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி