எங்கிருந்து வருகிறாய்…?!
மனிதாபிமானத்தின் தேசத்திலிருந்து!
ஏன் வருகிறாய்?!
அங்கு யுத்தம் நடக்கிறது!
யுத்தம் ஏன் நடக்கிறது…!
மனிதர்களை மீட்பதற்கு!
உனது கால்கள் எங்கே?!
யுத்தத்தின் காலைப்பசிக்கு கொடுத்தேன்!
உனது கைகள் எங்கே?!
யுத்தத்தின் பகல்பசிக்கு கொடுத்தேன்!
உனது தலை எங்கே?!
யுத்தத்தின் இரவுப்பசிக்கு கொடுத்தேன்!
உனது குருதி எங்கே?!
யுத்தத்தின் தாகத்திற்கு கொடுத்தேன்!
உனது சொத்துக்கள்…?!
ஆயுதங்களின் கொள்ளை ஆசைக்கு!
உனது இளமை எங்கே..?!
அது சமருக்கு சமர்ப்பணம்!
உனது குழந்தைகள்?!
நான்தான் அது…!
அவர்களின் குழந்தைகள்!
அதுவும் நான்தான்.!
கனவுகள் இருக்கின்றதா? எங்கு?!
எங்கோ இருக்கிறது. ஆனால் இருக்கிறது.!
உனது மிகுதி உயிர் எங்கே…!
என்னூரில் ஒரு மரத்தடியில்!
அங்கு எப்படி…?!
என்காதலி அங்குதான் எரிந்துபோனாள்.!
காதல் வேறா…?!
அகதிகளாவதற்கு முன் நாங்கள் மனிதர்கள்.!
யுத்தம் உங்களை என்ன செய்தது…?!
கேள்வியே பிழை. யுத்தம் என்ன செய்யவில்லை என்பதே சரி.!
யுத்தம் மனிதர்களை மீட்டதா?!
கேள்வியில் குழப்பம்…!
என்ன சொல்ல விரும்புகிறாய்.!
எது நடந்ததோ… எது நடக்கிறதோ…!
எது நடக்குமோ…!
ஒன்றும் நன்றாக நடக்கவில்லை:!
நடக்கிறதில்லை; நடப்பதில்லை.!
அப்படியே இரு… ஒரு புகைப்படம் வேண்டும்.!
வேண்டாம்…!
கமராக்கள் உண்மை சொன்னதில்லை!
நாங்கள் உண்மையின் குழந்தைகள்!
நாங்கள் யுத்தத்தின் குழந்தைகள்
வே.தினகரன், பத்தனை