கிராமங்களை விட்டு - தீபச்செல்வன்

Photo by Jasmin Causor on Unsplash

வெளியேறியவர்களின்!
பாடல்கள்!
------------------------------------------------------------------!
தானியங்கள் வீடுகளில்!
நிரம்பிக்கிடக்கின்றன!
வீடுகள் நிரம்பிய!
கிராமங்களைவிட்டு!
நாங்கள்!
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.!
துயரத்தின் பாதைகள்!
பிரிந்து நீள்கின்றன!
எல்லா பாதைகளும்!
தலையில்!
பொதிகளை சுமந்திருக்கின்றன.!
எல்லோரும் ஒருமுறை!
நமது கிராமங்களை!
திரும்பிப்பாருங்கள்!
இப்பொழுதே!
தின்னைகள் சிதைந்துவிட்டன!
வீடுகள்!
வேரோடு அழிந்து விட்டன.!
ஒரு துண்டு நிலவுதானே!
வானத்தில் எஞ்சியிருக்கிறது!
அடர்ந்த மரங்களுக்கிடையில்!
காடுகள் வரைந்த வீதிகளில்!
நாங்கள் எங்கு போகிறோம்.!
எனது அம்மாவும்!
ஏதோ ஒரு வழியில்!
போய்க்கொண்டிருக்கிறாள்.!
நான் எங்காவது!
அம்மாவை சந்திக்கலாம்.!
எனது வயதிற்கும்!
எனது உருவத்திற்கும் ஏற்ற!
பொதி ஒன்றை!
நான் சுமந்திருக்கிறேன்!
எனது அம்மாவும்!
தனக்கேற்ற!
பொதி ஒன்றை சுமந்தே!
போய்க்கொண்டிருக்கிறாள்.!
இந்த பொதிகளை!
வைத்து!
நாம் ஒரு வாழ்வை!
தொடங்கப்போகிறோம்!
எங்கள் வானம்!
பறிக்கப்பட்டு விட்டது!
எங்கள் நட்சத்திரங்கள்!
பறிக்கப்பட்டு விட்டன.!
செல்கள் முற்றங்களை!
மேய்கின்றன!
முற்றங்கள் சிதைந்து!
மணக்கின்றன!
விமானங்கள் வானங்களை!
பிய்க்கின்றன!
கிராமங்களை தின்னுகின்றன!
வீதிகளை இராணுவம்!
சூறையாடுகிறது.!
எங்ள் கிராமங்களை!
விடுவித்துக்கொண்டதாக!
அரச வானொலி அறிவிக்கிறது.!
சாம்பல் நாகரிகத்திற்கு!
கிராமங்களை!
பறிகொடுத்து விட்டு!
போவதைப் போலிருக்கிறது!
நதிகள் வற்றிவிட்டன!
நமது பறவைகளின்!
முட்டைகள்!
கரைந்து விட்டன.!
வேர் சிதைந்துகொண்டிருக்கிறது!
இனி நாங்கள்!
ஒரு துண்டு தரப்பாலுக்கு!
திரியப்போகிறோம்!
ஒரு மரத்தை தேடி!
அலையப்போகிறோம்.!
உற்றுப்பாருங்கள்….!
இங்கு இரவாயிருக்கிறது.!
நாங்கள் கறுப்பு மனிதர்கள்!
கறுப்பு பொதிகளை!
சுமந்தபடி!
நிழல் வீடுகளை!
பறிகொடுத்து விட்டு!
சிறுதுண்டு நிழலுக்காக!
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.!
-தீபச்செல்வன்
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.