ஈழம் எங்கள் கனவு தேசம் !
பொன் விழைக்கும் செம்மண் பூமி !
கருப்பனீர் சுவையோடொக்கும் !
கூவல்கள் நிறைந்த நாட்டின் !
முடிசூடா மன்னர் நாங்கள் !
ஆனாலும்.................. !
நாமங்கு ஆண்டு சுகித்திருக்க !
குறு நிலமும் இருந்ததில்லை !
குழி நிலமும் வாய்த்ததில்லை !
முன்றிலில் தோடை பலா !
கிணற்றண்டை இளங்கமுகு !
வேலியில் நெடும் பனைகள் !
வட மேற்கில் அரிநெல்லி !
பின் வளவில் கப்பல் வாழை !
காய்த்ததென்ற கதையில்லை !
சம்பாக்கதிர் விளையும் பசும் !
புலங்கள் பார்க்க சுகம் !
புகையிலை குடை விரிக்கும் - அதுவும் !
ஆண்டான் 'தறை’ யிலல்லோ !
புசித்தோர் புசித்திருக்க !
பசித்தோர் பசித்திருந்தோம் !
மாங்குயில் கூவுஞ்சோலை !
கனவுகளில் மட்டும்வரும் !
கமக்காரன் காணி பின்னால் !
புறம்போக்கில் ஒரு குடிசை !
!
வீறோடு வெள்ளெருக்கு !
சடைத்திருக்கும் நன்னிலத்தில் !
முன்னாலே பிரண்டைக்கொடி !
பின்பக்கம் விடத்தல் மண்டி !
நீக்கமறத் தரை யேகம் !
பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் !
நுனிவிரலில் சம நிலையில் !
பார்த்து நடக்க வேணும் !
கப்பல் கட்டி ஆண்டோமில்லை !
கால்நடைகள் கொண்டோமில்லை !
நினைத்த நேரந்தான் குளிக்க !
கிணறுதானும் இருந்ததில்லை !
தரிசினில்தான் பிழைத்தோம் !
வளமெல்லாம் வாழ்ந்தோர் கையில் !
இப்பரதேசி நாடகன்று !
ஆண்டுகள் பலவுமாச்சு............ !
இருந்தும் என் சிந்தையிலே !
எதற்கின்னும் புதைந்திருக்கு !
அப்பொட்டல் கரம்பன் புலம் ? !
- காருண்யன்