முற்றத்துப் பூவரசில் சேவலொன்று!
முதற்சாமம் கூவுகுதே துயில் மறந்து!
பற்றைகளில் சலசலப்பும் கேட்கவில்லை!
பாவியரைக் காக்கவென்றா உறங்குதில்லை!
சுற்றத்து உறவுகளும் விலகத் தூரம்!
சுதந்திரமாய்க் கூவிடவோ துணிவுமற்று!
கற்றவைகள் கடந்தவைகள் மனத்தில் உந்த!
கண் விழித்து மனத்திருத்திக் கூவுதங்கே.!
தொலைக்காடசிப் பெட்டிகளின் தொடரும் நீள!
தொல்லை தரும் சேவையெனப் புரிந்தும் நாளும்!
விலை மதிக்கா நேரமதை ஒதுக்கி ஓய்ந்து!
விடிவதையும் மறந்தபடி கோழி தூங்க!
கலைத்துவிட்ட தூக்கமுடன் சேவல் எல்லாம்!
கரையாமல் கூவாமல் எழுந்து ஓடி!
மலை போலப் பணம் சேர்க்க ஊண் மறந்து!
பாதையெது என்றறியாப் பறக்குதிங்கே.!
ஆறறிவு படைத்தவராம் சொல்லும் மாக்கள்!
அல்லலுறும் தம் சொந்தம் நிலை மறந்து!
தேறிவரும் செல்வமதில் முழுதே மூழ்க!
தெருவினிலே தம் பொழதைச் செலவும் செய்ய!
முறித்துவிட்ட உறவினைப்போல் அவரின் செல்வம்!
முரண்டுபட்ட சங்கமத்தில் தேடிச்சேர!
பறித்ததுவே அமைதியினைக் குடும்பம்தோறும்!
பார்த்திருக்கப் பொறுக்குதில்லை அகதிவாழ்வும்.!
!
த.சு.மணியம்