ஞாபக மழை - ஸ்ரீமங்கை

Photo by FLY:D on Unsplash

கடந்தநிகழ்வுகள், எதிர்பார்ப்புகள் என சிந்தனை நிகழ்வின் வழியே செல்கிறதோ? இறந்தகாலமும், எதிர்காலமுமற்ற ஒரு நொடியில் நம் பயணத்தை உணர்வதென்பது எத்தகைய அனுபவம்..? ஒரு பயணத்தின் சாட்சியாக இருப்பது ஈரமாக்கிய நினைவுகளேயன்றோ? என்ன பயணம் வாழ்க்கை..ஞாபகங்களன்றி.? !
ஞாபக மழை !
காலங்கள் கரைந்து !
சகதியாய்க் கிடந்த !
ஏதோவொரு வெளியில் !
மிதந்து வந்த நீலப்பேருந்தில் !
என்னை நான் ஏற்றிக்கொண்டதாய் !
இப்பயணம் தொடங்கியது... !
ஞாபகத்தில் சாரலினூடே !
உணர்வுகள் இணைந்து !
சுழித்துச் சுழித்தோட !
கவனமின்றி சக்கரம் பதித்துச் !
செல்லும் இப்பேருந்தின் !
பல சன்னல்களில் !
கண்ணாடிகள் !
நொறுக்கப் பட்டுவிட்டன. !
சில, சாலைகளின் !
அதிர்வுகளுக்குச் சற்றும் !
சம்பந்தமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன. !
எத்தனை முறை !
மூடினாலும் திறந்துகொள்வதென்பது !
அவற்றுக்குச் சாத்தியமாயிருக்கிறது. !
பல இருக்கைகள் மாறியமர்ந்தபின் !
எனது இப்போதைய இருக்கையினருகே !
சன்னலை சரியாக மூடிவிட்டேன் !
மழைத்துளிகள் என் தோள்களை !
இனி நனைக்காவண்ணம். !
முன்வரிசையில் திடீரெனத் !
திறந்துகொண்ட சன்னலில் !
தெறித்த மழைத்துளி !
தூவானமாய் என் !
மூக்குக்கண்ணாடியில் !
புகையடித்து, கன்னங்களில் சிலீரிடுகிறது. !
முழுதாய் நனைக்கும் !
பெருமழையை விட !
இத்தூவானம் !
மிகமோசம். !
தொடங்கிய இடத்திலோ !
அல்லது வெகுதொலைவிலோ !
வட்டத்தின் அடுத்த இரு புள்ளிகளைப்போல !
அருகிய வெகுதூரத்தில் !
இறக்கிவிட்டுக்கொண்டேன் !
ஓட்டுனரும் போய்ச்சேர !
ஒடும் பேருந்தும் போய்ச்சேர !
உள்ளிருப்பவனும் போய்ச்சேர.... !
யார் போய்ச்சேருவதற்கென !
யாரை யார் ஓட்டுகிறார்கள்? !
மீண்டும் ஒரு ஞாபக மாரிக்காலத்தில் !
என் பயணம் தொடரும். !
காத்திருப்பேன், !
சாரலில் நனைந்து கனத்தவாறு, !
சன்னல்களின் கண்ணாடிகள் !
நொறுங்கிய நீலப்பேருந்துக்காய் !
அன்றும்.. !
- ஸ்ரீமங்கை
ஸ்ரீமங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.