இந்தவருசம் வயல் நிறஞ்ச விளைச்சல். !
ஆத்தா கண்ணு திறந்துட்டா. !
கொடையன்னிக்கு எல்லாருக்கும் அரிசிச்சோறு போடுவம் !
தெற்குக்கரை திமிலோகப்பட்டது. !
பச்சை செல்லோஃபேன் பேப்பர் சுற்றி !
குழல்விளக்குகளின் ஊர்வலம் போக, !
அடிக்கவரும் ஆரஞ்சுநிறத்தில் பேண்ட் !
போட்ட விடலைப்பசங்களும், !
ரோசாப்பூ நிறத்து ரிப்பன் காட்டும் !
சிறுபெண்களுமாய் தெற்குக்கரை !
விழாக்கோலம் பூண்டது. !
அம்மன் தேரு குளக்கரை மண்டபம் சுற்றி !
வந்ததும், தலையாரிக்குப் பரிவட்டம்,அதுக்கப்புறம் !
ஆடு வெட்டு, கறிச்சோறு... !
நாவில் நீருறியது பலருக்கு. !
ஏலே,வடக்கத்தியான் பலியாட்டை !
வெட்டிடாண்டா !
பொறியாய்ப்பரவிய வதந்தி !
பெருந்தீயாய் மாறுமுன்னே !
தேருக்குப்பின்னால் மறைத்திருந்த !
வெட்டரிவாள்களும், சைக்கிள் செயின்களும் !
உருவப்பட்டன. !
வடக்கும் தெற்கும் மாறிமாறி !
கரையில் அடித்துக்கொண்டதில் !
கிழக்கும் மேற்குமாய் கம்மாயில் !
குருதிவெள்ளம். !
கலெக்டர் வந்தார். !
துப்பாக்கிச்சூடு..ஊரடங்கு உத்தரவு.. !
பத்துபேர் மரணம். பதினைந்து படுகாயம்- !
தினத்தினவின் முதல்பக்கம்... !
பலத்தகாவலுடன் இழுத்து வர !
தேர் நிலைக்கு வந்தது. !
ஊர் நிலைக்கு வர ஒருவாரம் பிடித்தது. !
காயங்கள் ஆறி,தலையாரிகள் கலெக்டர்முன்பு !
கை குலுக்கினார்கள். !
போட்டோகூடப் பிடித்தார்கள். !
குளக்கரை மண்டபத்தில் !
உய்யாங்கிழவன் ஆயாசமாகக் கால்நீட்டினான் !
இந்தவருசமும் கொடையன்னிக்கு பட்டினிதான் !
!
குளக்கரையில்
ஸ்ரீமங்கை