ஒரு இறந்தவளின் புகைப்படம் பற்றி சொல்வதற்கு!
எவ்வளவோ இருக்கிறது..!
சிரித்த முகத்துடன் எப்போதோ எடுக்கப்பட்ட!
அப்புகைப்படத்தை நம் கைகள் ஏந்துகையில்!
பூமியதிர்வை ஒத்த மன நடுக்கத்துடன் தடுமாறுகிறோம்..!
பூமி விழுங்கிய அவள் கண்கள் நம்மை உற்றுப்பார்ப்பது!
அத்தனை எளிதில் விளக்கக்கூடிய உணர்வு அன்று!
அது ஒரு சிறு பெண்ணின் புகைப்படமாயின்!
பரிதாபத்துடன் உற்று நோக்குகிறோம்!
அது ஒரு இளம்பெண்ணின் புகைப்படமாயின்!
இரண்டாம் முறையும் பார்க்கிறோம்!
அது ஒரு வயதானவளாய்!
சலனமேயின்றி நகர்கிறோம்..!
இறந்தவளின் புகைப்படம்!
நமக்குள் தோற்றுவிக்கும் ஏகாந்தம்!
ஓரிரு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்..!
எல்லாம் இருக்க!
நாம் இறந்த பிறகு!
நமது புகைப்படத்தை பார்க்கும் மனநிலை பற்றி!
எப்போதாவது நீங்கள் சிந்திக்கிறீர்களா?
நிந்தவூர் ஷிப்லி