உருகிச்சிதறும் நிமிடத்தின்!
ஒவ்வொருதுளியும் சேமிக்கின்றன!
நம்முகத்தின் பிரதிபலிப்புகளை.!
பகிர்ந்து கொள்ள முடியா!
முத்தத்தின் ஈரம்!
வானவில்லாகி மிதக்கிறது!
இந்த மாலையில்.!
நீ பருக மறுத்த பானத்தை!
முழுவதுமாக!
நான் பருகுகிறேன்!
கசப்போடும் இனிமையோடும்.!
திரைகளின் பின்னுள்ள!
பள்ளத்தாக்குகளில்!
மாயப்பறவையின் வினோதம் நிகழ்கிறது.!
இன்னும் காலியாகாத பானம்!
மீதமிருக்கிறது!
உன்னை நினைவூட்டியபடி;!
எப்போதும் பேசாமல் சேமித்திருக்கும்!
எனக்கான உன் சொற்களின் ரகசியத்தில்!
திரண்ட மகரந்தத்தில்!
அமர்ந்திருக்கிறதென் வண்ணத்துப்பூச்சி.!
மலையின் உச்சிச் சிகரத்தில்!
மீதிப்பானத்தோடு!
ஒற்றைச் சிறகில் நடனமிடுகிறது!
ஞாபகங்களும் கனவும்; நிரம்பிய!
என் மனம்;!
!
காத்திருப்பின் நிழல்!
வீதியாய் நீண்டு கடலாகி!
வானத்தில் சேர்ந்து விரிகிறது.!
நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசைக்கப்பால்!
சுழன்று கொண்டிருக்கும்!
முடிவிலிப்புள்ளியின் காய்ந்த மலர்!
இன்னும் வற்றாத ஞாபகங்களின் ரேகைகளோடு!
படபடக்கிறது ரகசியங்களுக்காக.!
இப்போது!
காலியாகிவிட்டது பானம்.!
வானவில்லில் தெரியும்!
அன்பறிந்த சொல்லை!
மொழிபெயர்க்க முடியுமா உன்னால்?!
ஆயின்!
என் காய்ந்த மலரிலும்!
நடனமிட்டுக்கொள்ளும்!
வாசனையையும் தேன்துளியையும்!
அறி.!
- கருணாகரன்
கருணாகரன்