என்ன கோபம் எங்கள் மீது இறைவா!
ஏது பிழை நாம் இழைத்தோம் இறைவா!
சொன்ன மொழி செந்தமிழே தவறா- இதில்!
சொல்லரிய குற்ற மென்ன தலைவா!
வானமது ஏறி நடந்தோமா - உங்கள்!
வானுலகில் தீது புரிந்தோமா!
ஆனதொரு கோபுரங்கள் ஏதும்!
அழித்திடித்து மோசம் விழைத்தோமா!
வேலெடுத்து சூலம் பறித்தோமா -அங்கு!
விளையாட உடுக்கை எடுத்தோமா!
தேவர்களை கேலி புரிந்தோமா ஒரு!
தேவமகள் கூந்தல் இழுத்தோமா!
தாவி முகில்ஏறி நடந்தோமா - சிவன்!
தலையிலுள்ள நிலவில் நடந்தோமா!
ஏனிழைத்த குற்றமென்ன இறைவா நீ!
எம் குலததை வேரறுத்தல் சரியா!
ஏன் புரிந்தாய் சுடலை ஆடும் சிவனே உன!
திருநடத்தால் செத்தது எம்இனமே!
ஊன் உருகி சாம்பல் மேடு ஆச்சு- இனி!
ஓடிவந்து அள்ளி மேனி பூசு!
படைத்தவனோ பிரம்மன் பார்க்கவில்லை - கடல்!
பள்ளிகொண்டான் எழுந்து காக்க வில்லை!
அழித்துவிட்டாய் நீயும் தமிழ் மண்ணை. இப்போ!
கொடுத்தென்ன புத்தனுக்கு மண்ணை!
கால் மிதித்து கச்சை யுடுத்தாயே வேங்கை!
தோல் உடுத்த கோபம் இன்னும் உண்டோ!
வேல் விழித்த உமை கொடுத்த பாகா -உன்!
கால் உதைக்க நாம் கிடைத்ததேனோ!
பாழுமுயிர் தானெடுக்க எண்ணின் அது!
பறித்தெடுக்க இது உனக்கு வழியா !
ஊழி நடமாடி உயிர் கொள்ள உனக்!
கொருமுறையும் இது விடுத்து இலையா!
ஆழிசூழ் உலகறியா கோரம் - மனம்!
அஞ்சும் இதை சொல்வதற்கு யாரும் !
மாளும் உடல் பட்ட வதை கொஞ்சம் அல்ல!
மரணம் என்ற பெயர் இதற்குமல்ல!
பிள்ளைபசி என்றழு மோர் தாய்க்கு!
பின்னிருந்து குண்டு வெடித்தததிரும்!
தள்ளிஒரு பிணம் நடந்து வீழும்!
தலைசிதறி துண்டெனவே ஓடும்!
மெய்சிலிர்த்து அச்சம் உச்சம் ஏறும்!
மிரண்டு பிள்ளை நீர்விடுத்துசோரும்!
கையில்லாம லொருவர் ஓடக் காணும் - கண்!
காட்சி கண்டு பஞ்சடைந்து போகும்!
நெஞ்சிடித்து வேகமாக நோகும்!
நினைவழிந்து கால்கள் சோர்ந்து சாயும்!
கண்ணெதிரே கணவன் உயிர்போகும்!
கதறியழ குரல் அழிந்துபோகும்!
துள்ளியோடி தப்பு என்று கூறும் மனம்!
மெல்ல எழ வீடிடிந்து வீழும்!
உள்ளிருந்து பிள்ளை அய்யோ என்கும்!
வீழ்ந்தசுவர் கால் பிடிக்க கதறும்!
பெண்குழந்தை இன்னொருத்தி ஓடும் முற்றம்!
போக ஒரு குண்டு அயல் வீழும்!
கண்ணெதிரே புகையெழுந்து மூடும்!
கண்டதுண்டமாகி உடல் சிதறும்!
பங்கருக்குள் ஒர்குழந்தை ஓடும்!
பாத்திருக்க மண்இழுத்து மூடும்!
புத்தன் பாதை வந்தவர் மண் போட!
பூமிஉயி ரோடுஅள்ளித் தின்னும்!
இத்தனையும் பார்த்து அவள் ஓட!
எங்கிருந்தோ சிங்களவர்வந்து!
குத்தியவள் நெஞ்சு கிழித்தோட!
குருதிவழிந்தே நிலத்தில் வீழ்வாள்!
பாதிஉயிர் போக யாதும் எண்ணி!
பரிதவித்து உடல்தகித்து நோவாள்!
வெயி லெறித்து நிலம்கொதிக்க தாகம்!
விட்டமீதி உயிரெடுத்துப் போகும்!
பீதி கொண்டு கத்தும்குரல் கேட்டு!
பிணங்களோடு பிணங்களாக சேர்ந்து!
போகுமுயிர் காக்கவென கிடந்தோர் - பலர்!
பிழைக்கவில்லை குழி பறித்து போட்டான்!
கவிபடிக்க குற்றம் கண்ட கீரன் தன்னை!
எரித்துவிட்டாய் ஏதும் எண்ணமுன்னே!
கொடிய புத்தஅரசு எம்மைக் கொல்ல!
கூடி நின்று வேடிக்கையா பார்த்தாய்!
முத்தெனவே வீரமுடன் விளைந்த பெரும்!
சொத்தினையே இழந்து விட்டோம் இறைவா!
ரத்தம் எல்லாம் போனபின்பு தமிழன் - வெறும்!
வைக்கல் பொம்மைதானே என்ற நினைவா!
இல்லை ஈழமைந்தர் புதைந்தாலும் அவர்!
எண்ணியது போவதில்லை என்றும்!
வில்லை விட்டு ஏகும் அம்புபோல - இவர்!
வீறுகொண்டெழுந்து செயல் கண்டார்!
அல்லன போய் ஆதவனாய் ஒளிர்வான் ஈழ!
அரசுவரும் ஆட்சியிலே அமர்வான்!
வெல்லவென பிறந்தவனாம் விதியே உன்!
வினைமுடித்து ஓடு தமிழ்வெல்வான்
கிரிகாசன்