இனிமையான மாலைப் பொழுதினிலே!
இலண்டன் தேம்ஸ்நதிக் கரையினிலே!
இளந்தென்றல் காற்றின் அணைப்பினிலே!
இதயம் பறக்குது வண்ணக் கவிதையுலகில்!
வந்தன பலநூறு வசந்தங்கள் வாழ்க்கையில்!
தந்தன வாசம் வீசிடும் இன்பப் பொழுதுகள்!
நின்றன ஏனோ சோகவேளைகள் மனதில்!
சென்றன பலமைல்கள் வாழ்க்கைப் பயணத்தில்!
அன்னை நாட்டை துறந்தொரு பயணம்!
அன்று நான் கண்டது வாழ்க்கைப் பாடம்!
அகலமான அடியெடுத்து நடந்ததும் பின்னால்!
அடைந்த அனுபவங்கள் ஆயிரம் தேறும்!
இன்றைய பொழுது இடைவேளை வாழ்வில்!
இதயத்தின் ராகங்கள் எழுத்தாய் இசைக்கின்றன!
இணைந்த சொந்தங்களின் தூய்மை எனை!
இன்பவனத்தினுள் கொண்டு தொலைத்தன!
காதிலொரு செய்தி காற்று வந்து சொல்லும்!
கண்ட துன்பம் யாவும் கானல் போல மறையும்!
கவிதை எந்தன் மனதில் என்றும் வந்து துள்ளும்!
கனத்த நெஞ்சின் பாரம் பஞ்சு போல மாறும்!
வசந்த கால அழகினைப் பருகிக் கொண்டே!
வந்திடுவோம் கோடைகால வெப்பத்தினுள்!
வண்ணஓவியமாய் கண்முன் இலையுதிர் காலம்!
வெள்ளைப்பட்டு உடுத்தும் மாரிகாலப்பனிமழை!
நதிக்கரையின் ஓரத்திலே நான் நீந்திய!
நினைனு நீரில் கண்ட காட்சிகள் என்!
நடந்து வந்த பாதையினை நன்கு!
நினைவூட்டிய பொழுது தெரிந்ததுவே!
உண்மை ஒன்று என்னுள்ளத்திற்கு!
உன் வாழ்க்கைப் பயணம் உன் கையிலில்லை!
உனக்குக் கிடைத்த வாழ்க்கையை உண்மையாய்!
உவகை பொங்க வாழ்ந்திடுவதே கடமை!
!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்