புளிக் குழம்போடு..!
அரைத்த கேழ்வரகின்!
ஆவிபறக்கும் உருண்டை!!
இளம் முருங்கைக்கீரை!
கூட்டோடு..!
இடித்த கம்பஞ் சோறு!!
புளிச்சக்கீரையோடு..!
புதுச் சோளச் சோற்றுக்!
கவளம்!!
இம்முறையேனும்!
ஆக்கச்சொல்லி!
அம்மாவிடம் கேட்க வேண்டும்!!
ஊர் கிளம்பும்!
ஒருவாரம் முன்பே - என்!
ஏளனப் பார்வைக்கு இலக்காகும்..!
உயிர்க்கொல்லிப் பொடிகளால்!
உருவாகும் சாம்பாரும்!!
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட!
கடையரிசி சோறும்!!
'புள்ளைங்க வந்தா மட்டுந்தான்!
நல்ல சோறு சாப்பிட முடியுது'!!
அப்பா சான்றிதழ் தருவார்...!
பார்த்துப் பார்த்து!
அம்மா சமைத்த!
அரிசி சோற்றுக்கும்!!
ஆறேழு பொடிப்போட்ட!
குழம்புக்கும்!!
இரைப்பைத் தொடாமலே!
செரிக்கும்!
தொண்டைக் குழியில்!
உருட்டி வைத்த - என்!
களி, கம்பஞ்சோற்று ஆசை!!
***!
- ஆ.மணவழகன்

ஆ.மணவழகன்